

கோப்புப் படம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், 2 கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 2023-ல் கலவரம் ஏற்பட்டது.
அம்மாநிலத்தில் இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் வெடித்து வருகிறது. வன்முறை்யில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் குகி அதிகம் வசிக்கும் சாசாட் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 36 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக காம்ஜோங் மாவட்டத்தில் டாங்குல் நாகா மக்கள் வசிக்கும் கிராமத்துக்குள் நேற்று புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் டாங்குல் நாகா இனத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன.
இதற்கிடையில், இந்தியா-மியான்மர் எல்லை அருகே உள்ள ஸ்கிப் மற்றும் பிலோங் ஆகிய இரண்டு டாங்குல் நாகா கிராமங்களுக்கு, குகி ஆயுதக் குழுவினர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.