Last Updated : 19 Jan, 2015 07:08 PM

 

Published : 19 Jan 2015 07:08 PM
Last Updated : 19 Jan 2015 07:08 PM

சிறிசேனா வெற்றியால் இலங்கையில் நல்லிணக்கம் மேம்படும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தேர்தல் வெற்றி மூலம் அந்நாட்டிலும் நமது பிராந்தியத்திலும் அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சி மேம்படும் என்று நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நெருக்கமான அண்டை நாடு மற்றும் நட்பு நாடான இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்றும் உறுதி கூறினார்.

இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “அதிபர் தேர்தலில் சிறிசேனாவின் வெற்றி, ஒற்றுமைக்கும் மாற்றத்தை விரும்பியும் அளிக்கப்பட்ட வாக்குகளாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்ட பிரதமர், “அனைவரின் குரலும் ஒலிக்கும் வகையில் உண்மையான அரசு அமைத்த இலங்கை அதிபரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டுகிறேன்” என்றார்.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பங்களிப்புடன் கூடிய அரசாங்கம் அமைத்த புதிய அரசின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர், ஒருவர் செல்லும் திசையை அவர்கள் எடுத்துவைக்கும் ஓரிரு அடிகளே தெளிவாகக் காட்டிவிடும் என்றார்.

“இலங்கை, இந்தியாவின் நெருக்கமான அண்டை நாடு மற்றும் நட்பு நாடாகும். இலங்கை அரசு மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இந்தியாவின் ஆதரவு மற்றும் கூட்டாண்மை தொடரும்.

இலங்கை தேர்தல் பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இத்தேர்தலை வெற்றிகரமாக முடித்துவைத்த இலங்கை மக்களை பாராட்டுகிறேன்” என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கு வரவேண்டும் என்ற தனது அழைப்பை சிறிசேனா ஏற்றுக்கொண்டதற்கும் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார். இரதரப்புக்கும் சவுகரியமாக ஒருநாளில் இலங்கை வருவதாக பிரதமர் கூறினார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x