Last Updated : 20 Jan, 2015 10:40 AM

 

Published : 20 Jan 2015 10:40 AM
Last Updated : 20 Jan 2015 10:40 AM

உ.பி.யில் முலாயம்சிங் பிறந்த நாள் விழா செலவை ஏற்க அமைச்சர்கள் மோதல்

மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் பிறந்த நாள் செலவை யார் ஏற்பது என்பதில் அம் மாநிலத்தின் இரு அமைச்சர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் 75-வது பிறந்த நாள் விழா கடந்த நவம்பர் 21-ம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாட்டை அவரது நெருங்கிய சகாவும், அம் மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆசம் கான் செய்திருந்தார்.

ஆசம் கான் தொகுதியான ராம்பூரில் நடைபெற்ற இந்த விழா மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. இதுகுறித்து ஆசம் கானிடம் கேட்டபோது, தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து வந்த பணம் செலவழிக்கப்படுவதாக கிண்டலாக பதில் அளித்திருந்தார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, தொழிலாளர் நலத் துறையின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டதால் அதன் முழு செலவையும் அந்த துறையே ஏற்க வேண்டும் என ஆசம் கான் கூறியுள்ளார். இதை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஷாஹீத் மன்சூர் ஏற்க மறுத்து விட்டார். அத்துடன் விழாவை நடத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம்தான் செலவை ஏற்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இதனால் அந்த செலவை ஏற்பதில் இரு அமைச்சர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், விழா ஏற்பாடுகளை செய்த நிறுவனங்களுக்கு பில் தொகை செலுத்தப்படாமல் உள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து பாஜக உபி மாநில செய்தித் தொடர்பாளர் டாக்டர்.மனோஜ் மிஸ்ரா கூறும்போது, “முலாயம் பிறந்த நாள் செலவை மாநிலத்தின் எந்தத் துறையும் ஏற்கக் கூடாது. இதற்கான ஏற்பாட்டை செய்த ஆசம் கான், தனது சொந்த பணத்தைக் கொண்டு நிலுவை தொகையை செலுத்த வேண்டும்.

முலாயம் பிறந்த நாள் விழாவின் பெருமையை ஏற்றுக்கொண்ட ஆசம் கான், செலவை மட்டும் தொழிலாளர் நலத் துறைக்கு அனுப்பியுள்ளார். அரசியல் கட்சித் தலைவரின் பிறந்த நாள் செலவை மாநில அரசு ஏற்பதை ஏற்க முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x