குட்டி ராதிகாவை மறைத்த குமாரசாமி மோடியின் திருமணம் பற்றிப் பேசுவதா?- கர்நாடக பாஜக பதிலடி

குட்டி ராதிகாவை மறைத்த குமாரசாமி மோடியின் திருமணம் பற்றிப் பேசுவதா?- கர்நாடக பாஜக பதிலடி
Updated on
1 min read

‘நடிகை குட்டிராதிகாவை 2-வது திருமணம் செய்து கொண்ட விஷயத்தை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, மோடி தன்னுடைய திருமணத்தை மறைத்தது பற்றிப் பேசத் தகுதியில்லை''என பா.ஜ.க.வை சேர்ந்த‌ முன்னாள் கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

தார்வாட் தொகுதியில் போட்டி யிடும் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹலாத் ஜோஷியை ஆதரித்து அம் மாநில‌ பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘சிக்பளாபூர் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன்னுடைய‌ முதல் மனைவியான‌ அனிதா குமாரசாமி பற்றியும் அவரது மகன் நிகில் கவுடாவின் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் மட்டுமே மனுவில் தெரிவித்துள்ளார்.

2-வது மனைவி

தன்னுடைய 2-வது மனைவியான நடிகை குட்டி ராதிகாவை பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை.மேலும் நடிகை குட்டி ராதிகா பெயரில் குமாரசாமி வாங்கி குவித்துள்ள சொத்துகளையும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அவர் திட்டமிட்டு ம‌றைத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள அனை வருக்கும் தெரிந்த இந்த விஷயம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் தெரியாமல் இருப்பது எப்படி?

தன்னுடைய 2-வது மனைவியும், பிரபல நடிகையு மான குட்டி ராதிகாவை உலகிற்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் குமார சாமிக்கு, மோடி தன்னுடைய‌ மனைவியை மறைத்தது குறித்து பேச தகுதி யில்லை.

மேலும் மோடி தன்னுடைய மனைவியை மறைத்துவிட்டதாக எல்லாரும் கூச்சல் போடுகிறார்கள்.ஆனால் உண்மையில் மோடியின் மனைவி பற்றி யாரும் கேட்காத தாலே, அவரைப்பற்றி மோடி எங்கும் சொல்லவில்லை'' என்றார்.

தள்ளுபடி செய்ய கோரிக்கை

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்ட பிரிவு செயலாளர் சி.எம்.தனஞ்செய், நடிகை குட்டி ராதிகாவை 2-வது திருமணம் செய்துள்ள விஷயத்தை மறைத்த குமாரசாமியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் அணில்குமார் ஜாவிடம் மனு அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in