Last Updated : 30 Jan, 2015 09:34 PM

 

Published : 30 Jan 2015 09:34 PM
Last Updated : 30 Jan 2015 09:34 PM

செல்போன்வழி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி

செல்போன்வழி நிர்வாகத்தை (எம்-கவர்னன்ஸ்) ஊக்குவிக்கும் வகையில், செல்போன் மூலம் அதிகப்படியான சேவைகளை வழங்குவதற்கான வழிகளை ஆராயுமாறு தகவல் தொழில்நுட்ப (ஐடி) வல்லுநர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இணையவழி நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) குறித்த 18-வது தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. முன்னணி ஐடி நிறுவன பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக பிரதமர் மோடி ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் கருத்துகளை பரிமாறிக்கொண்டார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவேற்றம் செய்த அடுத்தடுத்த கருத்துகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக அரங்கத்தில் பெரிய திரை பொருத்தப்பட்டிருந்தது. அப்போது மோடி கூறியதாவது:

செல்போன் மூலம் என்னென்ன சேவைகளை வழங்க முடியுமோ அதை எல்லாம் வழங்குவதற்கான அனைத்து வழிகளையும் ஐடி துறை வல்லுநர்கள் ஆராய வேண்டும். மொத்தத்தில் உலகத்தை நமது செல்போனுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும்.

நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பது எனது கனவு. இதன் ஒரு முக்கிய பகுதிதான் இணையவழி வணிகம். இணையவழி வணிகம் என்ற உடனேயே முதலில் செல்போனைத்தான் மனதில் கொள்ள வேண்டும். எனவே, செல்போன்வழி நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் செல்போன்வழி நிர்வாகம் பிரபலமாகும்.

நிர்வாக நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் புகுத்தினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதற்கு உள்ள தடைகளை தகர்த்தெரிய தொழில்நுட்பமும் இணையவழி நிர்வாக நடைமுறையும் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x