Last Updated : 20 Jan, 2015 08:02 AM

 

Published : 20 Jan 2015 08:02 AM
Last Updated : 20 Jan 2015 08:02 AM

ஜெயா - ஜேட்லி சந்திப்பில் சட்டப்படி தவறில்லை; வழக்கின் இறுதி தீர்ப்பிலும் பாதிப்பு இருக்காது- சட்ட நிபுணர்கள் கருத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று முன்தினம் சந்தித்ததில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.வி.விஸ்வநாதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின்படி, மேல்முறையீட்டு வழக்கை சந்தித்து வரும் ஒருவர் சட்டத்தின் கீழ் நிரபராதி என்ற நிலை தொடர்கிறது. அதன்படி ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், அதன் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவரை குற்ற வாளி எனக் கூறுவதே தவறு. இதனால் அவரை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்ததில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

நாடாளுமன்ற மாநிலங்களைவையில் ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு கோரி இந்த சந்திப்பு நடை பெற்றதாகக் கூறப்படுவதில் எந்த சந்தேகமும் கொள்ள முடியாது.

ஏனெனில், தேர்தல் விதிமுறைகளின் புதிய சட்டப்படி முதல்வர் பதவியை இழந்தாலும் அதிமுக கட்சித் தலைவராக ஜெயலலிதா நீடிக்கிறார். எனவே, இது தொடர்பாக ஆதரவு கேட்பதற்காக அவரை சந்திப்பதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே, இந்த இருவரின் சந்திப்பை அரசியல் ரீதியானதாகவே கருத முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதே பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான எம்.என்.கிருஷ்ணமணி கூறியதாவது:

நண்பர்கள் என்ற முறையிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற முறையிலும் நடைபெற்றதாகக் கருதப்படும் இந்த சந்திப்பில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. ஜெயலலிதாவைப் போல் ஜாமீன் பெற்ற குற்றவாளிகளை பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்கள் ஏற்கெனவே பல முறை சந்தித்துள்ளனர்.

மேலும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு மீது விசாரணை நடைபெற்று வருவதால், அதன் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவரை குற்றவாளி எனக் கூற முடியாது. இந்த சந்திப்பு குறித்து யூகங்களின் அடிப்படையில் வெளிவரும் கருத்துகள் சட்டப்படி ஏற்புடையது அல்ல.

இந்த சந்திப்பு தீர்ப்பில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்றும் கூற முடியாது. ஏனெனில், அரசு அமைப்பு மற்றும் தனி நபர் என யாருமே நீதிமன்ற நடவடிக் கைகளில் தலையிட முடியாது. தனித்து செயல்படும் சுதந்திரம் பெற்ற நீதிமன்றமும் அவைகளை எக்காரணம் கொண்டும் ஏற்காது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x