Last Updated : 10 Jan, 2015 11:49 AM

 

Published : 10 Jan 2015 11:49 AM
Last Updated : 10 Jan 2015 11:49 AM

இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பு: மாணவர் உட்பட 3 பேருக்கு 12 நாள் போலீஸ் காவல் - பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை

கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் (ஐஎம்) தீவிரவாத அமைப்புடன் தொடர் புடைய கல்லூரி மாணவர் உட்பட 3 பேருக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெங்க‌ளூரு தனிப்படை போலீஸார் அவர்களிடம் குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த ச‌தாம் ஹூசேன் (31), அப்துஸ் சபுயூர் (24) மற்றும் பத்கலைச் சேர்ந்த சையத் இஸ்மாயில் அஃபாக் (34) ஆகி யோரை போலீஸார் வியாழக் கிழமை கைது செய்தனர். இதில் கல்லூரி மாணவரான அப்துஸ் சபுயூர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎம் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப் பட்ட மூவரும் நேற்று பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது தனிப்படை போலீஸார் தரப்பில் விசாரணை நடத்த 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் வரும் 21-ம் தேதி வரை மூவருக்கும் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது.

நேரடி தொடர்பில்லை

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி கூறும்போது, “கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் ஐஎம் மட்டுமல்லாமல் வேறு சில தடை செய்யப்பட்ட அமைப்புகளுடனும் தொடர்பு இருக்கிறது. பெங்களூரு, சென்னை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் நேரடி தொடர்பில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களும் அங்கு குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களும் ஒரே வகையைச் சேர்ந்தவை. விசார ணையின் முடிவில் உண்மை தெரியவரும்” என்றார்.

ரகசிய இடத்தில் விசாரணை

இதனிடையே பெங்களூரு தனிப்படை போலீஸார் கைதானவர் களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் சதாம் ஹூசேன், சையத் இஸ்மாயில் அஃபாக் ஆகியோரின் பின்புலம் குறித்து விசாரித்து வருகின்றர். மேலும் அவர்களிட மிருந்து கைப்பற்றப்பட்ட செல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 1-ம் தேதி சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஸ்வாதி (24) என்ற பெண்ணும், டிசம்பர் 28-ம் தேதி பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பவானி தேவியும் (38) பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x