Published : 20 Jan 2015 09:00 AM
Last Updated : 20 Jan 2015 09:00 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் பேசிய அமித் ஷா, "டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி முன் நிறுத்தப்படுகிறார். அவர் தலைமையில் டெல்லி தேர்தலை பாஜக எதிர்கொள்ளும். பாஜகவின் கோட்டையான கிருஷ்ணநகர் தொகுதியில் கிரண் பேடி போட்டியிடுவார். இத்தொகுதியில்தான் கடந்த முறை ஹர்ஷவர்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்" என்றார்.

கிரண் பேடி பற்றி கூறும்போது, "கிரண் நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. நேர்மையானவர், ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர். அவர் சட்டம் பயின்றிருக்கிறார். டெல்லி மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்கள் எண்ணங்களை நிச்சயம் நிறைவேற்றுவார். தேர்தலில் நிச்சயம் வெற்றி காண்பார்" என்றார் அமித் ஷா.

பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, அனந்த குமார், கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சதீஷ் உபாதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

’நன்றிக்கடன் பட்டுள்ளேன்’

டெல்லி தேர்தலில் பாஜக முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கிரண் பேடி கூறுகையில், "பாஜக தலைவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x