Last Updated : 10 Jan, 2015 03:47 PM

 

Published : 10 Jan 2015 03:47 PM
Last Updated : 10 Jan 2015 03:47 PM

அராஜகவாதியால் ஆட்சி நடத்த முடியாது: டெல்லி பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் மீது மோடி தாக்கு

அராஜகவாதியாக நடந்து கொள்பவர்களால் காட்டுக்குச் சென்று நக்சல்கள் போல் சண்டைப் போட மட்டுமே முடியுமே தவிர, நாட்டில் ஆட்சி நடத்த முடியாது என்று அரவிந்த் கேஜ்ரிவாலை பிரதமர் நரேந்திர மோடி தாக்கிப் பேசினார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பிரச்சார கூட்டத்துக்கு டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அவர், "டெல்லி மக்களின் கனவுதான் எனது கனவும். உங்களது கனவை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராக அமைதியாக போராடி வருகின்றனர். அவர்களது அமைதி ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் மரியாதையும் நம்பிக்கையும் வெளிப்படுகிறது. அதனால்தான் அவர்கள் பாஜகவை தேர்வு செய்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை அளித்துள்ளனர். நாடெங்கிலும் பாஜகவுக்கு வெற்றி தொடர்கிறது.

டெல்லியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பலவீனமான ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியாளர்களின் நோக்கம் வளர்ச்சி மீது இருக்க வேண்டுமே தவிர அரசியலின் மீது இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கட்சி மத்தியிலும் டெல்லியிலும் ஆட்சி நடத்திய நேரத்திலும் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. ஹரியாணா மற்றும் டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்த வேளையிலும் இந்த மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தனர்.

நீங்கள் ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் அவர்கள் உங்களது வாக்குகளை வீணாக்கிவிட்டார்கள். ஆம் ஆத்மி பல பொய்ப் பிரச்சாரங்களை செய்து வருகிறது. டெல்லி மக்கள் ஆம் ஆத்மி தலைவருக்கு பாடம் கற்றுக்கொடுப்பார்கள். தன்னை அராஜகவாதியாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதியை பார்த்திருப்பார்கள் என்றால், அவர் அர்விந்த் கேஜ்ரிவால்தான். அராஜகவாதியாக வெளிப்படுத்துக்கொள்ளும் நபரால் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது. அவர்களால் காட்டில் சென்று நக்சல்கள் போல சண்டைதான் போட முடியும்.

எனது அரசு ஏழை மக்களுக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும் என நினைத்தது. காங்கிரஸ் ஆட்சி காலங்களில் ஏழை எளிய மக்கள் வங்கிகளுக்கு முன்னர் நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இப்போது ஏழை மக்கள் வங்கிகளை தேடிச் செல்கின்றனர். முன்பு வங்கிகள் பணக்காரர்களுக்கானதாக இருந்தது. ஊழல் பணத்தை பதுக்கும் இடமாக இருந்தது. இப்போது அந்த நிலை மாறியுள்ளது" என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x