Published : 16 Jan 2015 08:58 AM
Last Updated : 16 Jan 2015 08:58 AM

பாஜகவில் இணைந்தார் கிரண் பேடி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் கேஜ்ரிவாலை எதிர்த்து களமிறக்கப்படுகிறாரா?

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி பாஜகவில் இணைந்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.

புதுடெல்லியில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஹர்ஷவர்தன் ஆகியோர் முன்னிலையில் கிரண் பேடி பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "டெல்லியில் உறுதியான, நிலையான, ஊழலற்ற ஆட்சி தேவைப்படுகிறது. எனக்கு அதற்கான அனுபவமும், நேரமும், சக்தியும் இருப்பதால், நிச்சயம் டெல்லியை ஒரு உலகத் தரம் வாய்ந்த தலைநகராக மாற்றுவேன்" என்றார்.

டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாதயா மீது ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், பாஜக இத்தகைய முடிவை எடுத்துளது.

கிரண் பேடி பாஜகவில் இணைந்துள்ளது டெல்லியில் கட்சிக்கு வலு சேர்க்கும் என தெரிவித்த அமித் ஷா, சட்டப்பேரவைத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கிரண் பேடி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக, பாஜக நாடாளுமன்றக் குழுவே முடிவு எடுக்கும் என தெரிவித்துவிட்டார்.

கட்சியில் இணைவதற்காக முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திதார் கிரண் பேடி. பிரமருடனான சந்திப்புக்கு பின் அவர், "2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ததில் மோடியின் பங்கு என்னை ஈர்த்தது. அவர் நாட்டில் நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருக்கிறார்" என்றார்.

தனது 40 ஆண்டு கால நிர்வாக ஆளுமையை சுட்டிக்காட்டிய கிரண் பேடி, "டெல்லி காவல் துறை ஆணையராவதற்கு எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின்னரே நான் சமூக சேவையில் என் கவனத்தை திசை திருப்பினேன். பாஜகவில் இணைய எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு கடவுள் அருளால் கிடைத்தது என நம்புகிறேன். எனவே வாய்ப்பு வந்தவுடன் ஏற்றுக்கொண்டேன்" என்றார்.

பின்னர் பேசிய அருண் ஜேட்லி, பாஜகவில் கிரண் பேடி இணைந்துள்ளடு மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டு மக்களுக்கு அவரை நன்கு தெரியும். அரசுப் பணியில் இருந்த அவருக்கு நிர்வாகத் திறனும் உண்டு. கிரண் பேடி நம்பகத்தன்மை வாய்ந்தவர். ஒரு அரசியல்வாதியாக அவர் எடுத்துள்ள புதிய முயற்சி பாஜகவுக்கு வலு சேர்க்கும்" என்றார்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கிரண் பேடி என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x