Last Updated : 23 Dec, 2014 09:45 PM

 

Published : 23 Dec 2014 09:45 PM
Last Updated : 23 Dec 2014 09:45 PM

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி; காஷ்மீரில் கூட்டணி ஆட்சிக்கு பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி முயற்சி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவும் மக்கள் ஜனநாயக கட்சியும் ஏறக்குறைய சரிசமமான இடங்களில் பெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

ஜார்க்கண்ட், காஷ்மீரில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜார்க்கண்ட் நிலவரம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த மாநில பேரவைத் தேர்தலில் பாஜக, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு (ஏ.ஜே.எஸ்.யு.), லோக் ஜன சக்தி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 72 இடங்களிலும் ஏ.ஜே.எஸ்.யு. 8 இடங்களிலும் லோக் ஜன சக்தி ஓரிடத்திலும் போட்டியிட்டன.

எதிரணியில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.), காங்கிரஸ் கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அதன்படி ஜே.எம்.எம்.- 72, காங்கிரஸ்-62, ராஷ்ட்ரீய ஜனதா தளம்-22, ஐக்கிய ஜனதா தளம்-11 தொகுதி களில் வேட்பாளர்களை நிறுத்தின.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. அந்த கட்சி 37 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஏ.ஜே.எஸ்.யு. 5 இடங்களையும் பிடித்துள்ளன.

பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி 42 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தற்போதைய ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு பிரதான கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 8 இடங்களைப் பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் பாபுலால் மராண்டி, மதுகோடா ஆகியோர் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். முதல்வர் ஹேமந்த் சோரன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பார்ஹெய்த் தொகுதியில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார்.

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை யில் 87 தொகுதிகள் உள்ளன. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி அதிகபட்சமாக 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்து பாஜக 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி பல்வேறு பின் னடைவுகளுக்கு பிறகும் 15 இடங் களில் வெற்றி பெற்றுள்ளது. காங் கிரஸுக்கு 12 இடங்கள் கிடைத்துள் ளன. மார்க்சிஸ்ட் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல்வர் ஒமர் அப்துல்லா இரண்டு தொகுதிகளில் போட்டி யிட்டார். இதில் ஒரு தொகுதியில் மட்டும் அவர் வெற்றி பெற்றார்.

காஷ்மீர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இப்போதைய நிலையில் யாருடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x