Last Updated : 28 Dec, 2014 11:02 AM

 

Published : 28 Dec 2014 11:02 AM
Last Updated : 28 Dec 2014 11:02 AM

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா: பாஜக எதிர்ப்பு

மைசூரை ஆட்சிசெய்த திப்பு சுல்தான் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அரசு விழாவாகக் கொண் டாடப்படும் என‌ கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திப்பு சுல்தான் குறித்த புத்தகம் பெங்களூருவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது, “மைசூரை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். பிறப்பால் இஸ்லாமியராக இருப்பினும், மதசார்பற்ற கொள்கையுடன் ஆட்சி நடத்தினார். பல இந்துக்களை தனது அமைச்சராக நியமித்தார். கர்நாடக கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் வரும் காலங்களில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்'' என்றார்.

பாஜக கடும் எதிர்ப்பு

இது குறித்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று கூறும்போது, “திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட போது பல கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் குடகு, மங்களூரு ஆகிய மாவட்டங்களில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார். குடகு மாவட்டத்தில் கொடவா சமூக மக்களை அவர் தாக்கியுள்ளார். கர்நாடகம் மட்டுமன்றி கேரளத்தின் ப‌ல இடங்களில் கட்டாய மதமாற்றம் செய்துள்ளார். இஸ்லாமியரின் வாக்குகளை குறி வைத்து அவரை மதச்சார்பற்றவர் என காங்கிரஸ் கூறுகிறது. இதை கன்னட மக்களும், இந்துக்களும் ஏற்க மாட்டார்கள். கன்னடர் அல்லாத கன்னட மொழிக்கு எதிரான திப்பு சுல்தானுக்கு அரசு விழா எடுப்பதை எதிர்க்கிறோம். மீறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மத்தியில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் திப்புசுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு முயற்சித்தது. அப்போது பாஜக தலைமையிலான கர்நாடக அரசு கடுமையாக எதிர்த்தது. மேலும் நிலம் ஒதுக்க மறுத்ததால்,அத்திட்டம் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x