Last Updated : 13 Dec, 2014 02:47 PM

 

Published : 13 Dec 2014 02:47 PM
Last Updated : 13 Dec 2014 02:47 PM

பேப்பரில் சிமெண்ட்...

உறுதியான இல்லத்துக்கு அந்த சிமெண்ட் இந்த சிமெண்ட் எனப் பல விளம்பரங்கள் உங்கள் கண்ணை உறுத்தும். எந்த சிமெண்டை வாங்கி வீடு கட்ட என்று குழம்பிப்போவீர்கள். இப்போதெல்லாம் சிமெண்டுக்கு மாற்றாக எத்தனையோ கட்டுமானப் பொருள்கள் உள்ளன என்று சொல்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் பேப்பர்கிரீட். கான்கிரீட் தெரியும் இது என்ன பேப்பர் கிரீட் என்று யோசிக்கிறீர்களா? இதிலும் சிமெண்ட் தேவைப்படுகிறது. ஆனால் முழுவதும் சிமெண்ட் அல்ல என்பது அனுகூலமானது.

காகிதக் கழிவுகள், போர்ட்லேண்ட் சிமெண்ட் இரண்டையும் ஒருங்கிணைத்து இந்த பேப்பர்கிரீட்டைத் தயாரிக்கிறார்கள். இதிலேயே சிமெண்டுக்குப் பதில் களிமண்ணைப் பயன்படுத்தியும் பேப்பர்கிரீட் தயாரிக்கிறார்கள். சிமெண்ட் பயன்படுத்தாத பேப்பர்கிரீட் பசுமைக் கட்டிடம் அமைக்க உதவுகிறது. தினசரி வீடுகளில் சேரும் செய்தித்தாள்கள், பழைய பத்திரிகைகள் போன்ற அனைத்துக் காகிதக் கழிவுகளையும் இதன் தயாரிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மிகக் குறைந்த ஆற்றலிலேயே பேப்பர்கிரீட்டை உற்பத்திசெய்ய முடியும். பேப்பர்கிரீட்டைத் தயாரிக்க இருபுறங்களிலும் சக்கரம் கொண்ட சிறிய டிரெயிலர் போன்ற ஒரு வாகனம் பயன்படுகிறது. டிரெயிலர் சட்டத்தின் மீது ஒரு வட்ட வடிவ அண்டா போன்ற பெரிய கொள்கலனில் காகிதக் கழிவுகள், சிமெண்ட் அல்லது களிமண், நீர் ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டுகிறார்கள். தேவையான அளவுக்கு நன்றாகக் கலக்கிய பின்னர் இதைத் தரையில் உள்ள ப்ளாக்குகளில் கொட்டுகிறார்கள்.

பிளாக்குகளின் மீது டிரெயிலரை இழுத்துச் செல்லும்போது கொள்கலனின் அடியில் உள்ள சிறுதுளை மூலம் இந்தக் கலவை கொட்டப்படுகிறது. இது நன்றாக உலர்ந்ததும் பயன்படுத்தும்வகையிலான பேப்பர்கிரீட்டாகிறது. கூழ்மத்தை அப்படியே சுவரெழுப்பும் இடத்திற்கே கொண்டுசென்று பயன்படுத்த விரும்பினாலும் அப்படியே செய்யலாம். இல்லையெனில் பிளாக்காக உலர்ந்தபின்னர் பயன்படுத்தலாம்.

இந்த பேப்பர்கிரீட்டுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கான்கிரீட் பிளாக்குகளைவிட மிகவும் எடை குறைவானவை. மேலும் எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் இதைத் தயாரித்துக்கொள்ளலாம்

எனவே கையாள்வதும் மிக எளிது. பேப்பர் அடிப்படைப் பொருளாக இருந்தாலும் பேப்பர்கிரீட் எளிதில் தீப்பற்றாத தன்மை கொண்டது. ஏனெனில் பேப்பர்கிரீட் ஒரு ஸ்பான்ச் போலவே செயல்படுவதால் ஈரப்பதத்தை எளிதாக உறிஞ்சிக் கொள்ளும். ஈரத் தன்மை உள்ளதால் தீப்பற்ற வாய்ப்பில்லை. வெயில் காலத்துக்கும் மழைக் காலத்துக்கும் இது ஏற்றது என்கிறார்கள்.

சுவரில் ஆணியைப் பொருத்துவதோ, திருகாணியைச் செலுத்துவதோ எளிது என்கிறார்கள். சுவரில் வெடிப்பு தோன்றாத வகையில் இவற்றைச் செலுத்துவிடலாம். பேப்பர்கிரீட் எதையும் எளிதில் கடத்தாத தன்மை கொண்டது. அதனால் வெப்ப காலத்தில் வீட்டுக்குள் அதிக வெப்பம் பரவாது, அதே போல குளிர்காலத்தில் குளிரும் உள்ளே ஊடுருவாது என்கிறார்கள். ஒலியையும் இது கடத்தாது என்பதால் அதிக சத்தம் வெளியிலிருந்து வீட்டுக்குள் வர வாய்ப்பில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x