Last Updated : 29 Dec, 2014 09:08 PM

 

Published : 29 Dec 2014 09:08 PM
Last Updated : 29 Dec 2014 09:08 PM

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சனத்திற்கு அருண் ஜேட்லி பதில்

பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சனத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், “சீனாவின் வழியில் ஏற்றுமதியை மனதில் வைத்து இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைவிடுத்து உள்நாட்டு சந்தையை மனதில் வைத்து ‘இந்தியாவுக்காக தயாரிப்போம்’ என்ற திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி துறையை மட்டும் ஊக்குவித்தது சீனாவுக்கு பலன் கொடுத்திருக்கலாம். ஆனால் நம் நாட்டின் சூழல் அதிலிருந்து மாறுபட்டது. எனவே அந்த திட்டம் இங்கு பொருந்தாது” என எச்சரித்திருந்தார்.

இதற்கு அருண் ஜேட்லி கருத்தரங்கு ஒன்றில் பதில் அளித்தார்.

டெல்லியில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடர்பாக இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அருண் ஜேட்லி பேசியதாவது:

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்கள் உள் நாட்டு வாடிக்கையாளர்களுக்கா, அல்லது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கா என்பது பிரச்சினையல்ல. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் விலை மலிவான அதேநேரம் நல்ல தரமான பொருட்கள் மற்றும் சேவைகளையே விரும்புகிறார்கள் என்பதை உணர்த்துவதுதான் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் நோக்கம்.

எனவே, உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள், விலை மற்றும் தரம் ஆகியவற்றை மனதில் வைத்து தங்களது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளாதவரை தொடர்ந்து சவால்களையும் போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x