Published : 09 Apr 2014 11:58 AM
Last Updated : 09 Apr 2014 11:58 AM

உயிரைக் காப்பாற்றக் கெஞ்சிய சிஆர்பிஎப் வீரர்: வீடியோ விவகாரத்தில் டி.ஐ.ஜி. விளக்கம்

கண்ணிவெடித் தாக்குதலில் காய மடைந்து உயிரைக் காப்பாற்றும் படி கெஞ்சிய சிஆர்பிஎப் வீரர் உயிரிழக்கவில்லை என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தரப்பில் விளக்கமளிக் கப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் திப்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 7-ம் தேதி, மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடியைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

அதில், துணை கமாண்டட் இந்திரஜித்தும் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சில தொலைக்காட்சிகளில் ஒரு வீடியோ வெளியானது. அதில், துணை கமாண்டன்ட் இந்திரஜித் காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் தன் உயிரைக் காப்பாற்றக் கெஞ்சுகிறார். உடனடியாக ஹெலிகாப்டரை வரவழைத்து என் உயிரைக்காப்பாற்றுங்கள். மருத்துவர்கள்யாரும் இல்லையா எனக் கதறுகிறார். எனக்கு 2 குழந்தைகள் இருப்பதால் தயவு செய்து காப்பாற்றுங்கள் எனக் கதறும் வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

உரிய நேரத்துக்கு சிகிச்சை கிடைக்காததால் இந்திரஜித் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்குக் கண்டனங்கள் எழுந்தன.

மத்திய அரசின் அலட்சியப் போக்கே சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்ததற்குக் காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தொலைக் காட்சி களில் ஒளிபரப்பான வீடியோவில் உள்ள வீரர் உயிருடன் இருப்பதாகவும், அவர் இந்திரஜித் அல்ல என்றும் சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்ப்டுள்ளது.

இது தொடர்பாக சிஆர்பிஎப் டி.ஐ.ஜி. சிரஞ்சீவி கூறியதாவது: வீடியோவில் இருந்த நபர் தவறாக அடையாளம் சுட்டப்பட்டுள்ளார். வீடியோவில் இருந்தவர் திலீப் குமார், அவர் ராஞ்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்திரஜித் வெடிவிபத்தில் இறந்து விட்டார். மீட்புப் பணி துரிதமாகவும், திருப்திகரமாகவும் நடைபெற்றது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x