Last Updated : 19 Dec, 2014 02:42 PM

 

Published : 19 Dec 2014 02:42 PM
Last Updated : 19 Dec 2014 02:42 PM

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி லக்விக்கு ஜாமீன்: நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகள் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தன.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஐகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் அளித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் கண்டனம் உரிய வகையில் பாகிஸ்தானுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்கு தலில் 130 குழந்தைகள் உயிரிழந் ததில் பாகிஸ்தானை விட இந்தியர் கள் அதிக கவலையடைந்துள் ளனர். அக்கொடூர தாக்குதல் நடந்த மறுதினமே பாகிஸ்தானில் நடைபெறுபவை மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவருக்கும் இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவின் நிலைப்பாடு உட்பட பல்வேறு விளக்கங்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை விரிவான அறிக்கை அளிப்பார்.

இவ்வாறு மோடி பேசினார்.

இதைத்தொடர்ந்து, அனைத் துக் கட்சி ஆதரவுடன், ‘மும்பை தாக்குதலில் 166 உயிர்கள் பலியா வதற்குக் காரணமான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு ஜாமீன் அளிப் பதைக் கண்டித்து’ ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் தீர்மானம் வாசிப்பு

இந்த தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் வாசித்தார். அவர் பேசும்போது, “ ‘இது போன்ற குற்றவாளி எந்த தருணத்திலும் விடுவிக்கப்படமாட்டார் என்ற உறுதியை பாகிஸ்தான் நமக்கு அளிக்க வேண்டும். இப் பிரச்சினையை பாகிஸ்தானிடமும், சர்வதேச அமைப்புகளிடமும் முன்வைத்து, திருப்திகரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

கார்கே கோரிக்கை

முன்னதாக இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் அவைத் தலைவர் கார்கே, ‘இந்த பிரச்சினையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இருநாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் விரும்புகிறதா என அதன் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் நம் அரசு பேச வேண்டும். லக்வியைப் போன்ற குற்றவாளிகள் ஒருவருக்கு பின் ஒருவராக விடுவிக்கப்படுவது நல்லதல்ல” என்றார்.

சுஷ்மா பேச்சு

வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “மும்பை தாக்குதலின் முக்கிய காரணகர்த்தாவும், அகில உலக தீவிரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டவருமான லக்விக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ஏற்க முடியவில்லை என பாகிஸ் தானுக்கு தெளிவாக எடுத்துக் கூறியாகி விட்டது. குற்றவாளியான லக்விக்கு எதிரான சாட்சிகள் இல்லை எனப்படுவதை எங்களால் நம்ப முடியவில்லை. பாகிஸ்தான் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த விஷயத்தை நம் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.’ எனக் கூறினார்.

பிரதமருடன் ஆலோசனை

முன்னதாக, இது குறித்து கார்கே, சசிதரூர், அதிமுகவின் டாக்டர் வேணுகோபால் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ஆலோசனை செய்த னர். இதனை பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்யா நாயுடு ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.

சிறுதாளில் தயாரான தீர்மானம்

பூஜ்ஜிய நேரத்தில் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு பின் பேச எழுந்த சசிதரூரை அமரச் சொல்லி சைகை காட்டிய மோடி எழுந்து லக்வி பிரச்சினையின் மீது பேசத் தொடங்கினார். அதற்குள் இருக்கையில் அமர்ந்தபடி கார்கே எதிர்புறம் அமர்ந்திருந்த அமைச்சர் சுஷ்மா மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் ஆலோசனை செய்து ஒரு சிறிய தாளில் சில குறிப்புகளை எழுத, பாகிஸ்தானை கண்டிக்கும் தீர்மானம் தயாரானது.

இதில் எழுந்த சில சந்தேகங்களை கேட்கும் வகையில் சசிதரூர் பிரதமரிடம் வந்து ஏதோ கேட்டு விட்டுச் சென்றார். கடைசியாக தம்மிடம் அளிக்கப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x