Published : 23 Dec 2014 08:20 AM
Last Updated : 23 Dec 2014 08:20 AM

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்டில் இன்று வாக்கு எண்ணிக்கை: 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியும்

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளுக்கு நடை பெற்ற தேர்தலில் பதிவான வாக் குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு மாநிலங்களிலும் கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் கடந்த 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் சராசரியாக 65 சதவீதமும், ஜார்க்கண்டில் சராசரியாக 66.47 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

ஜம்மு காஷ்மீரில் 12-வது சட்டப்பேரவைக்காக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்த 821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, முக்கிய எதிர்க்கட்சி யான மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் முப்தி முகமது சயீது உள்ளிட்டோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமாங் நருளா நேற்று கூறும்போது, “மாநிலம் முழுவதும் உள்ள 28 மையங்களில் உள்ள 94 அரங்குகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்” என்றார்.

சுமார் 5,000 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடு வார்கள். வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முன்னிலை நிலவரம் அறிவிக்கப்படும்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் 81 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 111 பெண்கள் உட்பட 1,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இப்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் (தும்கா/பர்ஹைத்) முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, மது கோடா, பாபுலால் மராண்டி, சபாநாயகர் ஷஷாங்க் சேகர் பொக்தா ஆகியோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாஜக, சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தனித்தனியாகவும் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்தும் போட்டியிட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள 24 மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் பிஹார் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் புதிய மாநிலம் உருவானது. 2005, 2009-ல் நடைபெற்ற இரண்டு பேரவைத் தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடந்த 14 ஆண்டுகளில் 9 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 5 பேர் முதல்வர் பதவி வகித்துள்ளனர். 3 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

எனவே மூன்றாவது முறையாக நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலிலாவது எந்தக் கட்சியாவது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x