Published : 12 Dec 2014 08:29 AM
Last Updated : 12 Dec 2014 08:29 AM

நாட்டிலேயே முதன்முறையாக ரூ.500 கோடி செலவில் நதிகள் இணைப்பு திட்டம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

நாட்டிலேயே முதன்முறையாக ரூ.500 கோடி செலவில் கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியின்படி விவசாய வங்கிக் கடனை ரத்து செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூரில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நான் பிறந்த சித்தூர் மாவட்டத்தில் விவசாய வங்கிக் கடன் ரத்து சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை நன்கு அறிவேன். தேர்தலுக்கு முன்பு 2,811 கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்டதால் விவசாயிகளின் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்ள முடிந்தது.

இதனால் ஆட்சிக்கு வந்த உடன் விவசாய வங்கிக் கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தேன். அதன்படி தலா ரூ.1.5 லட்சம் வங்கிக் கடனை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக தலா ரூ.50 ஆயிரம் ரத்து செய்யப்படும். அடுத்தடுத்து 4 கட்டங்களில் மீதமுள்ள ரூ.1 லட்சம் கடனும் ரத்து செய்யப்படும்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள ரூ.5 ஆயிரம் கோடி வங்கிக் கடன் ரத்து செய்யப்பட உள்ளது. தற்போது முதல் கட்டமாக 349 கோடியே 27 லட்சத்து 97 ஆயிரத்து 841 ரூபாய் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 22.79 லட்சம் விவசாயிகள் பயனடைவர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்கொலையை தடுக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடப்பா, கர்னூல், அனந்தபூர், சித்தூர் ஆகிய மாவட்டங்கள் மழையை நம்பியே உள்ளன. இந்த மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நதி நீர் இணைப்பு திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

கோதாவரி நதியிலிருந்து ஆண்டு தோறும் ஏராளமான நீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனால் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைத்து, சித்தூர் மாவட்டத்தில் ஹந்திரி-நீவா, காலேரு-நகரி குடிநீர் பாசன கால்வாய் திட்டத்தில் இணைக்கப்படும். இதனால் 4 மாவட்டங்களில் நிரந்தரமாக தண்ணீர் பிரச்சினை தீரும்.

வரும் ஜனவரி மாதம் முதல் ‘ஸ்மார்ட் ஆந்திரா’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் திரைப்பட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ள முன்வர வேண்டும். இவர்கள் மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் மாநிலம் அனைத்து துறையிலும் சீரான வளர்ச்சி பெறும். இத்திட்டத்துக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x