Published : 23 Dec 2014 12:27 PM
Last Updated : 23 Dec 2014 12:27 PM

மின்வாரிய ஊழல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

மின்வாரியத்தில் நடந்த ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிக் குவித்து நிலுவையில் உள்ள கடன் ரூ. 64,278 கோடி; வாரியத்தின் ஒட்டுமொத்த கடன்சுமை ரூ.1.46 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. மின்வாரிய கடன் சுமை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது வரலாறு காணாததாகும்.

2013-14 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் கடன் சுமை ரூ. 1.53 லட்சம் கோடி. ஒரு மாநில அரசின் கடன் சுமைக்கு நிகராக ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மின்வாரியத்தின் கடன் சுமை அதிகரிப்பதற்கு காரணம் அந்த அமைப்பு சந்தித்து வரும் இழப்புகள் தான். 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் மின் வாரியம் மொத்தம் ரூ. 77,917 கோடி இழப்பை ஈட்டியுள்ளது. நடப்பாண்டின் இழப்பையும் கணக்கில் கொண்டால் 4 ஆண்டுகளில் மின்சார வாரியம் ஈட்டிய இழப்பின் அளவு ரூ. 55,000 கோடியைத் தாண்டிவிடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மின்வாரிய இழப்பு அதிகரிப்பதற்கு காரணம் அங்கு நடக்கும் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களும் தான். உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.14,312 கோடி ஆகும். 2012 ஏப்ரல் மாதத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரூ.7,874 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். இதனால் 2012 ஆம் ஆண்டில் மின்வாரிய இழப்பு ரூ.6,500 கோடிக்கும் கீழ் குறைந்திருக்க வேண்டும்.

ஆனால், அதைவிட ரூ.5,000 கோடி கூடுதலாக 2012 ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.11,679 கோடி இழப்பை சந்தித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த விவரங்களை விட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.

போதிய அளவில் மின்னுற்பத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்படாததும், அதைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்களிடமிருந்து மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதும் தான் மின்வாரிய இழப்புக்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வரை மின்தட்டுப்பாடு இல்லை. இக்காலத்தில் மின்வாரிய இழப்பு சராசரியாக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், மின்வெட்டு தீவிரமடைந்த 2008 ஆம் ஆண்டில் ரூ.7,771 கோடியாகவும், 2011 ஆம் ஆண்டில் ரூ.14,312 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் 3 ரூபாய்க்கு கிடைக்கும் மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூ.15.14 என்ற அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதமும் இழப்புக்கு காரணம் ஆகும். குறித்த காலத்தில் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைத் தவிர்த்து இழப்பைக் குறைத்திருக்கலாம். ஆனால், மின்திட்டங்கள் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டன. மேலும் மின்திட்டங்களை தாமதப்படுத்திய ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேட்டூர், வடசென்னை மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக அவற்றின் ஒப்பந்ததாரர்களான பி.ஜி.ஆர் குழுமம், பெல் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து ரூ.7,418 இழப்பீடு வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், இந்த இழப்பீடு வசூலிக்கப்பட்டு இருந்தால் பேருதவியாக இருந்திருக்கும்.

ஆனால், இந்த நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் பெல் நிறுவனத்திற்கு தமிழக அரசு அளவுக்கு அதிகமான சலுகை காட்டி வருகிறது.

பெல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும், அதில் பெருமளவில் ஊழல்கள் நடப்பதாக எழுந்த குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது மத்திய கண்காணிப்பு ஆணையமும், மத்திய புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தி வருகின்றன. பெல் நிறுவனத்துடன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் வணிகத் தொடர்பு வைத்திருப்பதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாற்றுகள் குறித்து அந்த நாடுகளின் விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இதற்குப் பிறகும் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதற்கு காரணம் அந்த நிறுவனத்தால் தமிழக ஆட்சியாளர்களுக்கு பல வழிகளில் பயன் கிடைப்பது தான் என்ற குற்றச்சாற்று உண்மையா?

மின்சார வாரியத்தை சீரமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், இவை பற்றி விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசோ இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக மின்சார வாரியத்தின் தலைவரை தலைமைச் செயலாளராக்கி பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட அரசு இந்த முறைகேடுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, மின்வாரியத்தில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x