Published : 22 Dec 2014 12:44 PM
Last Updated : 22 Dec 2014 12:44 PM

பாஜக எம்எல்ஏ, நகராட்சித் தலைவரின் மிரட்டல் வீடியோ: சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மற்றும் நகராட்சித் தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துப் பேசும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கோட்டா மாவட்டம், லாட்புரா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பவானி சிங் ரஜாவத். இவர் சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்காளர்களிடம் நயந்து பேசுவது போலவும் பின்னர் மிரட்டுவது போலவும் வீடியோ வெளியாகியுள்ளது.

“உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் நீங்கள் வசிக்கும் சட்டவிரோத குடியிருப்புகளில் இருந்து உங்களை விரட்டிவிடுவேன்” என்று எம்எல்ஏ மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இம்மாநிலத்தின் பண்டி மாவட்டம், நயின்வா நகரில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இரு சமூகத்தினர் இடையே மோதலை தொடர்ந்து பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்காக பண்டி மாவட்ட டி.எஸ்.பி. ஒருவரை, பாஜகவைச் சேர்ந்த நயின்வா நகராட்சித் தலைவர் பிரமோத் ஜெயின் மிரட்டுவது போல் ஆடியோ வெளியாகியுள்ளது.

பாஜக எம்எல்ஏ ரஜாவத் தொடர்பாக வெளியான மற்றொரு வீடியோவில், அவர் டிஎஸ்பி ஒருவரை கண்டிப்பது போல் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோக்கள் மற்றும் ஆடியோ குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஜ்ரா சிங் கூறும்போது, “அந்தப் பதிவு களை இதுவரை நான் பார்க்க வில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார்.

கோட்டா மாவட்ட பாஜக தலைவர் ஹேமந்த் விஜய் வர்கயா கூறும்போது, “தொடர்ந்து கட்சிக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். அந்தப் பதிவுகளை இதுவரை நான் பார்க்கவில்லை” என்றார்.

மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்ச ருமான ஹரிமோகன் சர்மா கூறும்போது, “பாஜகவினர் இருவருக்கும் எதிராக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

எம்எல்ஏ மறுப்பு

இந்நிலையில் எம்எல்ஏ பவானி சிங் ரஜாவத் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

“நீங்கள் வசிப்பதற்கு மாற்று இடமும், பிற அடிப்படை வசதிகளும் செய்து தருகிறேன். எனவே பாஜகவுக்கு வாக்களியுங்கள். காங்கிரஸ் உங்களுக்கு எதுவும் செய்யவில்லை அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தான் கூறினேன்” என்றார் ரஜாவத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x