Published : 18 Dec 2014 13:29 pm

Updated : 18 Dec 2014 13:29 pm

 

Published : 18 Dec 2014 01:29 PM
Last Updated : 18 Dec 2014 01:29 PM

நயமான இசை தந்த வள்ளல்

துறவிகள் உலக மக்கள் வாழ்வதற்காகவே பல யாகங்கள், பூஜைகள் செய்வார்கள். ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற துறவியோ தன் துயரம் தீர்வதற்காகக் கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற கர்நாடக இசைப் பாடல் தொகுப்பை இயற்றினார்.

வயிற்று வலியால் துடித்த ஸ்ரீநாராயண தீர்த்தர், உண்மையான துறவியாக இருந்து அனைத்து நலனையும் மக்களுக்குச் செய்துவரும் புண்ணிய காரியத்தில் ஈடுபட்டுவந்தாலும் தன் வயிற்று வலி தீரவில்லையே அதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருந்திக் கண்ணனிடம் வேண்டி நின்றார்.

சிறந்த பக்தர்களில் ஒருவரான ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கவலையைப் போக்கத் திருவுளம் கொண்டான் கண்ணன். அவரது கனவில் வந்த கண்ணன் அவரது முன் வினைப்பயனைக் கூறினான். அப்போது அவர் அந்தண குலத்தில் பிறந்தவராக இருந்தார். அன்னதானம் செய்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவராக இருந்தார்.

இதனைச் செய்வதற்காக தனது குலத் தொழிலை விடுத்து, மளிகைப் பொருட்கள் வியாபாரம் செய்ய முடிவெடுத்தார். அந்த ஊர் செல்வந்தரிடம் தேவையான பணம் பெற்று மளிகை வியாபாரம் தொடங்கினார். வியாபாரம் செழித்தது. லாபம் குவிந்தது. அந்த பணத்தில் அன்னதானம் சிறப்பாக நடந்துவந்தது. பத்மநாபன் என்ற பெயருடைய அவர் மேலும் அதிகமாக அன்னதானம் செய்ய விரும்பினார். அதனால் நிறைய லாபம் பெற, கல்லையும் மண்ணையும் கலந்து, பொருளின் எடையைக் கூட்டினார். லாபம் இரட்டிப்பானது. அன்னதானமும் இரண்டு மடங்கானது.

அன்னதானம் செய்ததால் இப்பிறவியில் உயர்குலப் பிறப்பும், கலப்படம் செய்ததால் வயிற்று வலியும் பெற்றார் என்று கிருஷ்ணர் விளக்கினார். காலையில் விழித்ததும் கண்ணில் படும் பன்றியைப் பின்தொடர்ந்து சென்றால் நற்பலன் விளையும் எனக் கனவில் கூறி மறைகிறார் கிருஷ்ணர். கண் விழித்ததும் பன்றி கண்ணில் பட அதனைத் தொடர்ந்து இவர் ஓட கோயிலுக்குள் பன்றி மறைய, கோவிந்தனே வந்ததை உணருகிறார். அதனால் இவ்வூர் வரகூர் எனப் பெயர் பெற்றது (வராகம் என்றால் பன்றி). வயிற்று வலியும் மாயமாக மறைந்தது. வயிற்று வலித் துயரம் தீர்ந்ததும் பீறிட்டுக் கிளம்பியது கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்த பாடல்களுக்கு கிருஷ்ணன் பாமா, ருக்மணியுடன் இணைந்து நடனம் ஆடியதைத் தான் கண்டதாகக் கூறுகிறார்.

கண்ணனையே எப்போதும் வழிபட்டுவந்த இவருக்கு, இவரது பாடல்களுக்காகப் பல சீடர்கள் அமைந்தனர். அவர்கள் ஒரு நாள் இவரது காலடியில் ஏராளமான பொன்னையும் பொருளையும் கொண்டு குவித்தனர். இவற்றைக் கண்ட  நாராயண தீர்த்தர் இவை கிடைத்த விதத்தை அறிய முற்பட்டார்.

காஷ்மீர கவி ஒருவரின் கர்வத்தை அடக்கி, அவரைத் தங்கள் புலமையால் வாதில் வென்றதாகக் கூறிய அவர்கள், தாங்கள் அளித்த பயிற்சியே இதற்குக் காரணம் என்றனர். அதனால் வென்ற பரிசுகள் அனைத்தையும் அவரது பாதங்களில் சமர்ப்பித்ததாகக் கூறினர். அதற்கு ஸ்ரீநாராயண தீர்த்தர் ஒருவருடைய மன வருத்தத்தால் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி, அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கூறினார்.

இவருக்குத்தான் தாள முடியாத வயிற்று வலி. ஒன்று, இரண்டு நாட்கள் அல்ல; தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலி. கண்ணனின் அருளால் இவ்வலி நீங்கிய கதைதான் மேலே காணப்படுகிறது.

கர்னாடக இசை வல்லுனரான இந்த நாராயண தீர்த்தர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். கோவிந்த சாஸ்த்ருலு என்ற இயற்பெயர் கொண்ட இவர் பானக நரசிம்மரால் புகழ் பெற்ற மங்களகிரிக்கு அருகில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார். நீண்ட நாள் வாழ்ந்த இவரது காலம் பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறது தஞ்சை சரஸ்வதி மகால் நூலக நூல்.

இளமையிலேயே துறவு மேற்கொண்டு ஆன்மிக வாழ்வில் ஆழ்ந்திருந்தார் இவர். தத்துவத்தை போதிக்க ஆன்மிக சிறப்பு மிக்க காசிக்குச் சென்றார். இயல்பிலேயே நாட்டியம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட அவர், 34 வகையான ராகங்களை அறிந்திருந்தார். தாள வகையிலும் தன்னிகரற்று விளங்கினார். எளிமையான பாடல்களை இயற்றினார். ஆனாலும் அனுஷ்டுப் உட்பட 17 வகையான சந்தஸ்களை அமைத்துத் தனது பாடல்களை இயற்றுவதில் வல்லவராக இருந்தார். பாரிஜாத அபஹர்ணம் மற்றும் ஹரிபக்தி சுண்டர்ணவம் ஆகிய இரண்டு நாடகங்கள் உட்பட பதினைந்து புத்தகங்கள் எழுதி உள்ளார். ஆந்திராவில் பிறந்த இவர் ஜீவ சமாதி அடைந்தது தமிழகத்தில் உள்ள திருப்புந்துருத்தி கிராமத்தில்தான்.


இசை வள்ளல்நாராயண தீர்த்தர்கிருஷ்ண லீலா தரங்கிணிகர்நாடக பாடல் தொகுப்பு

You May Like

More From This Category

More From this Author