Published : 12 Dec 2014 12:00 PM
Last Updated : 12 Dec 2014 12:00 PM

நாடு முழுவதும் மதமாற்ற தடைச் சட்டம் வேண்டும்: மக்களவையில் வெங்கய்யா நாயுடு பதில்

நாடு முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மக்களவையில் நேற்று தெரிவித் தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த மதமாற்றத்தை தொடர்ந்து 2 வது நாளாக மக்களவையில் நேற்றும் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக மக்களவை கூடிய வுடன் சபாநாயகரின் இருக்கைக்கு முன் வந்து நின்ற எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து ஆக்ரா மதமாற்ற விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வேண்டும் எனக் கோரினர். இதனால், நீண்ட நேரம் நிலவிய அமளியின் காரணமாக மக்களவை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு, மதியம் அனுமதிக்கப்பட்ட விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதற்கு வெங் கய்யா நாயுடு பதில் அளிக்கையில், ‘ஆர்எஸ்எஸ் போன்ற ஒரு சிறந்த அமைப்பை பார்க்க முடியாது. அது இந்த நாட்டுக்கு சேவை செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் வந்தவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். எங்கள் தாய் அமைப்பு தவறாக விமர்சிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த நாயுடு, அவை கடந்த ஆட்சியிலும் நடந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதில், மதக்கலவரம், மதமாற்றம், அமைச்சர் ஜோசியம் பார்ப்பது, நாடாளுமன்ற சிற்றுண்டி விடுதியில் அசைவ உணவு நிறுத்தப்பட்டது, சமஸ்கிருதம் திணிப்பு போன்ற விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.

மதமாற்றம் என்பது ஒரு முக்கியமான விஷயம் என குறிப்பிட்ட நாயுடு, இதற்கு முடிவு கொண்டு வர வேண்டும் என்பது தங்கள் அரசின் எண்ணம் என தெரிவித்தார். இங்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதாரங்களின் அடிப்படையில் பேசியதாகவும், அதை அவர்கள் தங்கள் அரசின் மீது குற்றம் சுமத்தப் பயன்படுத்தியதாகவும் சுட்டிக் காட்டினார். புதிய அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதம் ஆகிறது. சிறந்த ஆட்சி, நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களிடம் அன்பு செலுத்துவது மட்டும் தான் நோக்கம் என்று நாயுடு விளக்கம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x