Last Updated : 13 Dec, 2014 03:07 PM

 

Published : 13 Dec 2014 03:07 PM
Last Updated : 13 Dec 2014 03:07 PM

ட்விட்டரில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: பெங்களூருவில் பொறியாளர் கைது; வழக்கு பதிவு

ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் ஐஎஸ் தீவிரவாத‌ அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐ.டி. பொறியாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை (24) பெங்களூரு போலீஸார் நேற்று அதிரடியாக‌ கைது செய்தனர்.

4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஐஎஸ் தீவிரவாத அமைப் புக்கு ஆதரவாக ட்விட்டரில் செயல்பட்டு வருகிறார். அந்த அமைப்புக்குஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் என பிரிட்டனை சேர்ந்த 'சேனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி பெங்களூருவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தலைமையில் த‌னிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடங்கியது. நேற்று அதிகாலை பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஐடி நிறுவன ஊழியர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

ட்விட்டரில் சிக்கினார்

இதுதொடர்பாக கர்நாடக மாநில டிஜிபி லால் ருக்குமா பச்சாவோ பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

கைது செய்யப்பட்டுள்ள மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் ஐ.டி. பொறியாளராக பணிபுரிகிறார். மேற்கு வங்க‌ மாநிலம் கோபால்பூரை சேர்ந்த இவர், 2012-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். ஆண்டுக்கு ரூ.5.38 லட்சம் சம்பளம் பெற்று வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பகலில் வேலைக்கு செல்லும் மேக்தி, இரவு நேரத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் பக்கத்தில் தீவிரமாக‌ செயல்பட்டுள்ளார். 'ஷமி விட்நஸ்' (@shamiwitness) என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து அதில் ஐஎஸ், ஐஎஸ்ஐஎல் தீவிரவாத‌ அமைப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரம் ட்விட்களை பதிவு செய்துள்ளார்.

தீவிர மத நம்பிக்கை கொண்ட மேக்தி, ஐஎஸ் அமைப்பு குறித்து அரபு மொழியில் வெளியாகும் செய்தியை உடனுக்குடன் மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்தொடர்ந்துள்ளனர். இவர்களில் 3-ல் 2 பங்கு பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள். சிலர் அதில் இணைந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுடன் மேக்தி நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளார். துருக்கி, சிரியா, லெபனான், இஸ்ரேல், எகிப்து, லிபியா நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக மாதந்தோறும் 60 ஜிபி இன்டர்நெட் டேட்டா பயன்படுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆங்கிலமும் அரபு மொழியும் அறிந்த, ஐரோப்பா வில் வாழும் தீவிரவாதிகளுடன் அவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தாக 'சேனல்4' தொலைக்காட்சி கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மேக்தி மீது பெங்களூரு போலீஸார் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-ன் கீழ், ஆசிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இணையதளத்தை நாட்டுக்கு எதிராக பயன்படுத்தியதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத் தின் 66-வது பிரிவின் கீழும், சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் பிரிவு 18, 39 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது வீட்டில் இருந்த 2 செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிபி லால் கூறினார்.

3 ஆண்டுகளாக செயல்பட்டார்

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி,'தி இந்து'விடம் பேசும் போது, ''மேக்தி போலியான‌ பேரில் ட்விட்டர் பக்கம் தொடங்கி ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக இருந்துள்ளார். தான் யார் என்பது வெளியே தெரியாத வகை யில் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டுள்ளார்.

மேக்தி அரபு மொழியில் பதிவிட்ட ட்விட்களை மொழிமாற்றம் செய்யும் பணியில் இறங்கி இருக்கிறோம். தீவிர விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்'' என்றார்.

எந்த தவறும் செய்யவில்லை: கைதான மேக்தி பேட்டி:

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பெங்களூருவை சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ட்விட்டரில் செயல்படுகிறார் என பிரிட்டனை சேர்ந்த 'சேனல் 4' தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.

இதையடுத்து மேக்தி எவ்வித விசாரணையும் இன்றி பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாவதற்கு முன்பாக மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் அளித்த பேட்டியில், ''எனக்கு எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை.நான் யாருக்கும் எந்த குற்றமும் செய்யவில்லை. எனது நாட்டின் சட்டத்தை எங்கேயும் மீறவில்லை. இந்தியாவுக்கு எதிராகவோ, இந்திய மக்களுக்கு எதிராகவோ எந்த வன்முறையும் நிகழ்த்தவில்லை. இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. என்னிடம் எவ்வித பயங்கர ஆயுதமும் இல்லை. இருப்பினும் என்னை கைது செய்ய வந்தால் ஓடி ஒளியமாட்டேன். என்னை பிடித்துச் சென்றால் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுத்தள்ளவும் வாய்ப்பு இருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?- நண்பர்கள் மறுப்பு:

பெங்களூருவில் மேக்தியுடன் பணியாற்றியவர்களை 'தி இந்து'சார்பாக சந்தித்து விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது:

மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸின் அப்பா மேற்குவங்க மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேக்திக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் குடும்ப சூழல் காரணமாக 2012-ம் ஆண்டு பெங்களூரு வந்தார். பொறியியல் படிப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்றதால் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அவருக்கு தீவிர அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது என போலீஸ் கூறுவதை நம்ப முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாலை காவல்நிலையத்துக்கு வருமாறு போலீஸார் அவரை அழைத்தனர். அவருடைய செல்போன், லேப்டாப், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் எல்லாவற்றை யும் பிடுங்கிக்கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x