Last Updated : 20 Dec, 2014 11:51 AM

 

Published : 20 Dec 2014 11:51 AM
Last Updated : 20 Dec 2014 11:51 AM

வட மாநிலங்களில் கடும் குளிரால் இயல்பு நிலை பாதிப்பு: டெல்லியில் 90 ரயில்கள் தாமதமாக இயக்கம்

டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான உறை பனி நிலவுகிறது. டெல்லியில் 90 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று காலை 8.30 மணி அளவில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத வகையில் அடர் பனி மூட்டம் நிலவியது.

பனி மூட்டம் காரணமாக டெல்லியிலிருந்து புறப்படும் 63 ரயில்கள், பிற இடங்களிலிருந்து வந்து சேர வேண்டிய 27 ரயில்களின் நேரம் நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த ரயிலும் ரத்து செய்யப்படவில்லை.

விமானப் போக்குவரத்தும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2 விமானங்கள் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. ஆனால் எந்த விமான சேவையும் ரத்து செய்யப்படவில்லை.

அடுத்த சில தினங்களுக்கு கடும் பனியுடன் வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச தட்பவெப்பம் 7.4 டிகிரி செல்சியஸாகவும், அதிக பட்ச தட்பவெப்பம் 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடும் குளிர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே, கார்கில், லடாக் உள்ளிட்ட பகுதி களிலும் உறை பனி நிலவியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் குளிர் காற்று வீசுவது தொடர்கிறது. அப்பகுதியில் தட்பவெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கு கீழே சென்றுள்ளது.

லே பகுதியில் தட்பவெப்ப நிலை மாநிலத்திலேயே மிகக் குறைந்த அளவாக மைனஸ் 12.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இது மைனஸ் 14.6 டிகிரி செல்சிய சாக இருந்தது.

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான நகரில் குறைந்த பட்ச வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. பஹல்காம், குல்மார்க் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் நிலவியது.

பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் நேற்று கடுமை யான குளிர் காற்று வீசியது. திரும்பிய இடமெல்லாம் பனி படிந்து காணப்பட்டதால் பல இடங் களில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.

உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா, முசாபர்நகர் உள்ளிட்ட பகுதியிலும் கடுமையான குளிர் நிலவியது. வாரணாசி, லக்னோ ஆகிய நகரங் களிலும் வழக்கத்தைவிட கடுங் குளிர் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x