Last Updated : 13 Dec, 2014 07:00 PM

 

Published : 13 Dec 2014 07:00 PM
Last Updated : 13 Dec 2014 07:00 PM

புகைப்படம் ஒரு சாட்சியம் என்றால் சஹாரா ஊழலில் மோடியையும் கைது செய்ய வேண்டும்: மம்தா ஆவேசம்

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் மேற்குவங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ கைது செய்தது குறித்து மம்தா பானர்ஜி பாஜக அரசியல் மீது கடும் காட்டமாக விமர்சனம் வைத்தார்.

அமைச்சர் மதன்மித்ரா, சாரதா குழும தலைவர் சுதிப்தா சென்னுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்கள் பற்றி மம்தா பானர்ஜியிடம் கேட்ட போது, “கிரிமினல் குற்றம்சாட்ட புகைப்பட ஆதாரம் ஒன்று போதுமெனில், சஹாரா ஊழலில் நமது பிரதமரையும் கைது செய்திருக்க வேண்டும்” என்று மம்தா பானர்ஜி காட்டமாக பதில் அளித்தார்.

“சிபிஎம் கட்சி தலைவர்கள் கூடத்தான் சாரதா குழும தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். நம் பிரதமர் கூட சஹாரா தலைவருடன் இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் மோடியை கைது செய்யுங்கள் என்று கோர முடியுமா?

மேலும், அவர் பாஜக குறித்து காட்டமாகத் தாக்குகையில், “சிபிஐ மீதான அனைத்து நம்பிக்கைகளும் போய்விட்டன. அது தன் ஆண்டானின் குரலுக்கு செவிசாய்க்கிறது. சிபிஐ என்பது அரசியல் கருவியாகிவிட்டது. அதனை மூட இதுவே சரியான தருணம். பாஜக-வின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக எங்கள் கட்சி எம்.பி.க்கள் திங்களன்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

வரம்புக்குள் செயல்படுங்கள் இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். வங்காள மக்களை புண்படுத்தினால் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். பாஜக அரசு அதிகாரத்தில் இருப்பதால் அடாவடியாக நடந்து கொள்கிறது.

நான் இங்கு ஒரு முதல்வராக வரவில்லை, ஒரு பொதுஜனமாக வந்திருக்கிறேன், மதன்மித்ரா திருடர் என்றோ கொள்ளைக்காரர் என்றோ நான் ஒருக்காலும் நம்ப இடமில்லை. அவரது குடும்பத்தை நடத்த அவருக்கு சாரதா சிட்பண்ட் பணம் தேவையில்லை.

சிபிஐ அதிகாரிகள் மதன்மித்ராவின் மகனிடம் எந்த பள்ளி, கல்லூரியில் படிக்கிறார் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டெல்லியிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது, அதன் பிறகே மதன் மித்ரா கைது செய்யப்பட்டார்.

அவரை முதலில் சாட்சியாகவே அழைத்துள்ளனர். சாட்சி என்று கூப்பிட்டு பிறகு கைது செய்தால். இனி யார் சாட்சி கூற முன்வருவார்கள்??” என்று மம்தா திரிணமூல் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் பொங்கி எழுந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x