Last Updated : 21 Dec, 2014 09:09 AM

 

Published : 21 Dec 2014 09:09 AM
Last Updated : 21 Dec 2014 09:09 AM

ஜார்க்கண்ட், காஷ்மீரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் குவிந்தனர்

ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில் 5-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5 கட்ட தேர்தல்களிலும் சேர்த்து 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல ஜார்க்கண்டில் 66.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற இறுதி கட்ட தேர்தலில் ஜார்க்கண்ட்டில் 71.25 சதவீதம் பேரும், ஜம்மு காஷ்மீரில் 65 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இரு மாநிலங்களிலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதி யாக நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டில் 5 கட்ட தேர்தலும் எவ்வித அசம்பாவித மும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக போலீஸாரும், தேர்தல் பணியா ளர்களும் சிறப்பாக பணியாற்றினர். மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் வாக்குரிமையை செலுத்தினர் என்று மாநில தேர்தல் அதிகாரி பி.கே. ஜாஜோரியா கூறியுள்ளார்.

இரு மாநிலங்களிலும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே பெருவாரியான மக்கள் ஆர்வத் துடன் காத்திருந்து வாக்களித்தனர். பிற்பகல் 1 மணி அளவில் பல இடங்களில் 60 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன. கடந்த தேர்தலில் ஜார்க்கண்டில் 54.2 சதவீத வாக்குகளே பதிவாகின. இப்போது 66.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காஷ்மீரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். காஷ்மீரில் 2008-ம் ஆண்டு தேர்தலில் 61.42 சதவீதமும், 2002 தேர்தலில் 43.09 சதவீத வாக்கு களும் பதிவானது. இப்போது 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இறுதிக்கட்ட தேர்தலில் ஜார்க்கண்டில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஜம்மு - காஷ்மீரில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜார்க்கண்ட்டில் பாஜக; காஷ்மீரில் இழுபறி நிலை: கருத்துக் கணிப்பில் தகவல்

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஏபிபி நியூஸ், நீல்சன் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் பாஜகவுக்கு 52 தொகுதிகளுடன் பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 14 முதல் 18 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீரில் மெஹ்பூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 32 முதல் 38 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். பாஜகவுக்கு 27 முதல் 33 தொகுதிகள் கிடைக்கும். இப்போது ஆளும் கட்சியாக உள்ள தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 8 முதல் 4 இடங்களும், காங்கிரஸுக்கு 4 முதல் 10 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x