Last Updated : 13 Dec, 2014 12:24 PM

 

Published : 13 Dec 2014 12:24 PM
Last Updated : 13 Dec 2014 12:24 PM

கிறிஸ்துவரை மதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், முஸ்லிமுக்கு ரூ.5 லட்சம்: அலிகாரில் நிதி திரட்டும் இந்துத்துவ அமைப்பு

உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில், இந்துதுவ அமைப்பு நடத்த இருக்கும் மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சிக்கு நிதி திரட்டும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக இந்துத்துவ அமைப்பின் உத்தரப் பிரதேச கிளையான சமய ஜகரன் சமிதியின் பொறுப்பாளர் ராஜேஷ்வர் சிங் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதுக்கான நிதி திரட்டும் ஏற்பாடுகளை அந்த அமைப்பு நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்துவரை மதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், முஸ்லிமுக்கு ரூ.5 லட்சம்

அலிகாரின் வரலாற்றை மீட்டு கொண்டு வர விலைமதிப்பிட முடியாத 'கர் வாப்சி' என்ற மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் முஸ்லிம் ஒருவரை மதமாற்றம் செய்ய ரூ.5 லட்சமும், கிறிஸ்துவர் ஒருவரை மதமாற்றம் செய்ய ரூ.2 லட்சமும் தாராள நிதியாக வழங்க வேண்டும் என்று ராஜேஷ்வர் சிங் கேட்டுக்கொண்டுள்ளதாக அலிகார் சுற்றுவட்டாரங்களில் வழங்கப்பட்டுவரும் தேதி குறிப்பிடப்படாத துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை உத்தரப் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் மொத்தம் 2,000 முஸ்லிம்கள் உட்பட 40,000 பேருக்கு 'கர் வாப்சி' நிகழ்ச்சியின் மூலம் மதமாற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 'கர் வாப்சி' மூலம் ஒரு லட்சம் பேரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அலிகாரில் 'கர் வாப்சி' செய்து 50 முஸ்லிம்களை கட்டாய மதமாற்றம் செய்து வைத்தது தொடர்பாக பஜ்ரங் தளம் மற்றும் தரம் ஜாக்ரன் சமிதி தலைவர் நந்த கிஷோர் வால்மிகி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x