Published : 04 Dec 2014 10:11 AM
Last Updated : 04 Dec 2014 10:11 AM

ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் 3 கட்ட போராட்டம் அறிவிப்பு

ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பது, அண்மைக் கடல் பகுதியில் உள்ள மீன் வளத்தை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் நடத்தப்போவதாக விசைப்படகு மீனவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை விசைப் படகு மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் எம்.இ.ரகுபதி, கௌரவ தலைவர் எம்.இ.ராஜா ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் கடந்த 1976-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. சுமார் ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு கடல் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை வரையறை சட்டம் 1983 மற்றும் 2011-ன்படி, 3 கடல் மைல்களுக்கு அப்பால்தான் விசைப் படகுகள் மீன்பிடித் தொழில் செய்ய வேண்டும் எனவும், அதிகபட்சம் 150 குதிரைத் திறன் (எச்.பி.) கொண்ட விசைப் படகுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சில விசைப் படகுகள் சட்டத்தை மீறி 3 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து மீன் வளத்தை அழித்து வருகின்றனர். குறிப்பாக, அங்குள்ள பவளப் பாறைகள் அழிக்கப்பட்டு வரு வதால், ஒட்டுமொத்த மீன்வளமும் அழிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, மீன் வளத்தை பாது காக்க 3 கடல் மைல் தூரத்துக் குள்ளாக செயற்கை பவளப் பாறைகளை அமைத்து மீன் இனத்தை பெருக்க வேண்டும். மேலும், தொழிற்சாலை கழிவுகளை நேரடியாக விடாமல், சுத்திகரித்து கடலில் விட வேண்டும்.

ஆழ்கடலில் மீன்பிடிப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்போது ஆழ்கடலில் மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்டு வரும் படகுகளின் இயந்திரத் திறனை 150-ல் இருந்து 250 குதிரைத் திறனாக அதிகரிக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

மீன்களை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இதன்படி, முதற்கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கினோம். இரண்டாம் கட்டமாக வரும் 8-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன் பிறகும் எங்கள் கோரிக் கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை யெனில், அடுத்த கட்டமாக வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x