Last Updated : 14 Jul, 2019 04:44 PM

 

Published : 14 Jul 2019 04:44 PM
Last Updated : 14 Jul 2019 04:44 PM

பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறோம் தயாராக இருங்கள்: வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்த யஷ்வந்த் சின்ஹா

மிகப்பெரிய பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறோம் தயாராக இருங்கள் என்று, அணு ஆயுதச் சோதனை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன் என்னிடம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எச்சரித்தார் என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

கடந்த 1998-ம் ஆண்டு  மே 11-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணு குண்டு வெடித்து சோதனை செய்தது. இந்த சோதனையால் உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாகின.

உலக அளவில் இந்தச் சோதனை இந்தியாவின் தரத்தை உயர்த்திக் காட்டியது என்ற போதிலும், அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து, நீண்ட காலத்துக்கு பின் தடையை நீக்கியது.

இந்த அணுகுண்டு சோதனை குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹா "ரிலன்ட்லெஸ்"(Relentless) எனும் தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். இந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. அதில் இந்த சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா அந்த நூலில் கூறியிருப்பதாவது:

கடந்த 1998ம் ஆண்டு மே 11-ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. அந்த அரசில் நான் நிதியமைச்சராக இருந்தேன்.

அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன் என் வீட்டுக்கு அதிகாரி ஒருவரை அனுப்பி வாஜ்பாய் அழைத்துவரச் சொன்னார். நான் அதிகாலையில்  வாஜ்பாய் இல்லத்துக்குச் சென்றேன். வாஜ்பாய் படுக்கை அறையில் அமர்ந்திருந்தார்.

 வாஜ்வாய் ஏதோ முக்கியமான விஷயம் சொல்வதற்குமட்டுமல்ல, மிகவும் ரகசியமான விஷயத்தை சொல்வதற்குதான் என்னை அழைத்துள்ளார் என அறிந்துகொண்டேன். அப்போதுதான் அந்த ரகசியத்தை வாஜ்பாய் என்னிடம் தெரிவித்தார்.

ஆம், உலகத்தையே அதிரவைத்த, நம்மை பெருமைப்பட வைத்த அணுகுண்டு சோதனை செய்யப்போகிறோம் எனும் விஷயத்தை வாஜ்பாய் என்னிடம் தெரிவித்தார்.

"நான் அணுகுண்டு சோதனையை சிலநாட்களில் செய்ய இருக்கிறேன். இதுயாருக்கும் தெரியாது, மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள விஷயம். நாம் செய்யும் இந்த சோதனையைஉலக நாடுகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

இந்த சோதனைக்குப்பின் நமக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுப்பார்கள். குறிப்பாக பொருளாதாரத்தை முடக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும்" எனத் தெரிவித்தார்.

ஆதலால் எதிர்வரும் பொருளாதார சவால்களை சந்திக்கும் வகையில் நாம் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார பின்னடைவுகளை நாம் சமாளிக்க வேண்டும். எனக்கு முன்கூட்டியே வாஜ்பாய் அணுகுண்டு சோதனை குறித்து எச்சரித்துவிட்டதால், அது நடக்கும் போது எனக்கு அது பெரிய அளவுக்கு வியப்பாகத் தெரியவில்லை.

ஆனால், வாஜ்பாய் கூறியதை அமைதியாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்தேன்.  

நாங்கள் நினைத்ததுபோல் அனைத்தும் நடந்தது. வாஜ்பாய் அரசு அணுகுண்டு சோதனை நடத்தி முடித்ததும் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியும், கண்டனத்தையும் தெரிவித்தன. பெரும்பாலான வல்லரசு நாடுகள் இந்தியாவை எச்சரித்தன, பல்வேறு வகையான பொருளாதார தடைகளை விதித்து முடக்கிவைத்தன.

ஆனால், உலக நாடுகள் எந்த தடை விதித்தபோதிலும், அதை எதிர்கொள்ள வாஜ்பாய் அரசு தயாராக இருந்தது. அதேசமயம், பொருளாதார தடைவிதித்துவிட்டால் எந்த நாட்டிடமும் சரணடைந்து விடக்கூடாது,  பணிந்துவிடக்கூடாது என்பதில் வாஜ்பாய் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.

ஆனால், பொருளாதாரத் தடைவிதித்தபின், அந்த தடையால் நாம் பாதிக்கப்பட்டதைக் காட்டிலும் விதித்த நாடுகள்தான் அதிகம்பாதிக்கப்பட்டன. அதன்பின் நம்முடைய  பேச்சுவார்த்தைக்குப்பின் ஒவ்வொரு நாடுகளும் தங்களின் தடையை விலக்கிக் கொண்டன.

கடந்த 2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது, இந்தியா அதிகமான ராணுவத்தை அனுப்பி வைக்க கோரி அமெரிக்கா அதிகமான நெருக்கடி கொடுத்தது.  ஏராளமான பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் இந்தியா அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தின.

 அப்போது அரசில் முக்கிய  பதவி வகித்த அத்வானி, ஜஸ்வந்த் சின்ஹா ஆகியோர் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்பது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்பெறச் செய்யும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் வாஜ்பாய் அமெரிக்காவின் எந்த அழுத்தத்திற்கும், நெருக்கடிக்கும் பணிந்து கொடுக்கவில்லை. முடிவில் ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப முடியாது என்றார்

அதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், நட்வர் சிங், ஆகியோரை அழைத்து வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார். நாட்டின் நலனுக்கு என்ன தேவை என்பதை அவரிடம் கலந்து பேசினார். தேசிய ஜனநாயக்க கூட்டணித் தலைவர்களையும் அழைத்து வாஜ்பாய் விவாதித்து இறுதியாக ஈராக்கிற்கு இந்திய படைகள் செல்லாது என்று வாஜ்பாய் திட்டவட்டமாக அறிவித்தார்.

தேச நலன்கருதி எந்த முடிவுகள் எடுத்தாலும் வாஜ்பாய், எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவு எடுக்கும் பழக்கம் வைத்திருந்தார்.

இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x