Last Updated : 09 Jul, 2019 07:43 AM

 

Published : 09 Jul 2019 07:43 AM
Last Updated : 09 Jul 2019 07:43 AM

சாலை விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு புது திட்டம்: டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயம்?

சாலை விபத்துகளைத் தடுக்க ரப்பர்களில் சிலிகான் சேர்த்து டயர்கள் தயாரிப்பதையும் அவற்றில் நைட்ரஜன் வாயு நிரப்புவதையும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேட்ட துணைக் கேள்விகளுக்கு, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நொய்டா - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று (நேற்று) நடைபெற்ற விபத்து துரதிருஷ்டவசமானது. (பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்ததில் 29 பேர் பலியாயினர்.) விபத்துக்கான பின்னணி குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு ஏற்கெனவே கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

விபத்து நடந்த யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலையை உ.பி. அரசுதான் கட்டியது. அந்த சாலைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து பராமரித்து வருகிறது. இதில் நொய்டா - ஆக்ரா யமுனா நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை அல்ல.

எனினும், விசாரணை கமிட்டியின் பரிந்துரைகளில் என்ன கூறப்படுகிறதோ அவற்றை கண்டிப்பாக அமல்படுத்தும்படி உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.

சிமென்ட் கான்கிரீட் நெடுஞ்சாலையால், கடந்த 2016-ம் ஆண்டு 133 பேர் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டு 146 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு 11 பேர் உயிரிழந்தனர். இதுபோல் சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, வாகன டயர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு, ரப்பருடன் சிலிகான் சேர்த்து தரமான டயர்கள் தயாரிப்பதையும், டயர்களில் சாதாரண காற்றுக்குப் பதில் நைட்ரஜன் வாயு நிரப்புவதையும் கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும், சாலை பாதுகாப்பு தொடர்பான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஓராண்டாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் 30 சதவீத அளவுக்கு போலி ஓட்டுநர் உரிமம் பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், சாலை பாதுகாப்பு மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டியது அவசியம். நாட்டில் 25 லட்சம் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பற்றாக்குறையும் உள்ளது. அதற்காக நாடு முழுவதும் பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

தமிழகத்தில் விபத்துகள் குறைந்தன

மாநிலங்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறியதாவது: ரப்பரில் சிலிக்கான் சேர்த்து தயாரிக்கப்பட்ட டயர்களில், நைட்ரஜன் வாயு நிரப்புவதன் மூலம் அதிகபட்ச வெப்பத்தின் காரணமாக டயர்களை வெடிப்பது குறைவதாக அறியப்பட்டுள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்க ரூ.14 ஆயிரம் கோடியில் மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. சாலை விபத்துகளைத் தடுக்க ஆட்டோமொபைலில் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டும். சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் குறைந்துள்ளன. விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x