Last Updated : 04 Jul, 2019 06:23 PM

 

Published : 04 Jul 2019 06:23 PM
Last Updated : 04 Jul 2019 06:23 PM

கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் மேற்பார்வையிட முடியாது : டிஎன்சிஏவிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

டிஎன்பிஎல் போட்டியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்க்க அனுமதிக்கக் கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில் கோரப்பட்டது.

அந்த மனுவின் விசாரணையின் போது, உங்கள் கிரிக்கெட்டை நாங்கள் மேற்பார்வையிட முடியாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பை நீதிபதிகள் கண்டித்தனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டித் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் அணிகளால் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியிலும் வெளிமாநில வீரர்களையும் சேர்க்க அனுமதிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பிஆர் கவய் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் சிஓஏ சார்பில் பராக் திரிபாதியும் ஆஜராகி வாதாடினர்.

அப்போது கபில் சிபல் வாதிடுகையில் " தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் வெளிமாநில வீரர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார்.

அதற்கு நீதிபதிகள், " உங்கள் கோரிக்கையை சிஓஏ நிர்வாகிகளிடம் தெரிவிக்கலாம்" என்றனர்.

அதற்கு கபில் சிபல் " நாங்கள் கடந்த மே மாதமே இதுதொடர்பான கோரிக்கையை நாங்கள் சிஓஏ அமைப்பிடம் அளித்துவிட்டோம். அவர்கள் இப்போதுவரை முடிவு எடுக்கவில்லை" என்றார்.

அதற்கு நீதிபதிகள், " நாங்கள் முடிவு எடுக்கக் கோரி உத்தரவிடுகிறோம்" என்றனர்.

சிஓஏ சார்பில் வாதாடிய வழக்கறிஞர் திரிபாதி கூறுகையில், " தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு எங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது.பிசிசிஐயின் புதியவிதிமுறைகளை  ஏற்க மறுக்கிறது " எனத் தெரிவித்தார்.

அதற்கு கபில் சிபல், " வெளிமாநிலத்தில் இருந்து வரும் வீரர்களை சேர்க்காமல் அவர்களை தண்டிக்க பார்க்கிறீர்களா. வீரர்களை தண்டிக்கக் கூடாது " எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் " நீங்கள் விளையாடும் கிரிக்கெட்டை நாங்கள் மேற்பார்வை செய்ய முடியாது" என காட்டமாகத் தெரிவித்தனர்.

அதற்கு கபில் சிபல் " வெளிமாநிலத்தில் இருந்து இரு வீரர்களைச் சேர்க்க விரும்புகிறோம். சேர்க்கப்படும் வீரர் ஐபிஎல் போட்டியில் இருக்க கூடாது, சர்வதேச போட்டியிலும் ஆடி இருக்ககூடாது. அவர்களை அனுமதிப்பதால், எந்தவிதமான குறைபாடும் டிஎன்பிஎல்லுக்கு வராது " எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் " நாங்கள் நியமித்த குறைதீர்ப்பாளர்(ஆம்புட்ஸ்மேன்) இந்த விஷயத்தில் முடிவு எடுப்பாரா" எனக் கேட்டனர். அதற்கு சிஓஏ வழக்கறிஞர் "  குறைதீர்ப்பாளரிடம் கூறி இந்த விவகாரத்தில் தீர்வு காண்சொல்கிறோம்" எனத் தெரிவித்தார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x