Published : 13 Jul 2019 10:13 AM
Last Updated : 13 Jul 2019 10:13 AM

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது: பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

"ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரும் யாரையும் கட்டாயப்படுத்த கூடாது" என சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களால் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக, மாடுகளைக் கடத்தியதாக தாக்கப்படும் சம்பவங்களை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

நாடு முழுவதும் இதுவரை நடந்த இத்தகைய வன்முறைகளில் எங்கேயாவது குற்றவாளிகள் பிடிபடாமல் இருந்திருக்கிறார்களா?

ராஜஸ்தானில், கும்பல் வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவர் பிணையில் வர முடியாத சட்டத்தின் கீழ் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இதே போன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 4 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஒரு விஷயத்தைச் செய்ய சொல்லி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. அதேவேளையில் வந்தேமாதரம் பாட மாட்டேன் என யாரும் மறுக்கவும் முடியும். எப்படி ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரும் நிர்பந்திக்கக்கூடாதோ அதேபோல் வந்தேமாதரம் பாட மாட்டேன் என யாரும் அடம்பிடிக்கவும் கூடாது.

இந்திய கிராமங்களில் இன்றளவும் ராம் ராம் சொல்லும் பழக்கம் இருக்கிறது. இந்து, முஸ்லிம் பாகுபாடின்றி இதைச் சொல்கின்றனர். இந்த தேசம் மதச்சார்பற்றதாக இருப்பதற்கு சிறுபான்மையினர் காரணமில்லை. பெரும்பான்மை சமூகத்தினரின் மரபணுவே காரணம்" என்றார்.

அதிகாரியை கிரிக்கெட் மட்டையைக் கொண்டு தாக்கிய பாஜக பிரமுகர் ஆகாஷ் விஜவார்கியா, கோட்சேவை தேசபக்தர் என அழைத்த பிரக்யா தாகூர் ஆகியோர் குறித்த கேள்விக்கு, "பாஜக கட்டுப்பாடுகள் நிறைந்த கட்சி. இங்கே தன்னிச்சையாக யாரும் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது.

யாரேனும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களாயின் அவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும். பிரிவினைவாத சக்திகள் ஒருபோதும் வளர்ச்சி காண அனுமதிக்கப்படாது. நாங்கள் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறோன். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்க முயலும் சக்திகள் ஒடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x