Published : 02 Jul 2019 05:27 PM
Last Updated : 02 Jul 2019 05:27 PM

நீரவ் மோடி குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளை முடக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு

நீரவ் மோடியின் குடும்பத்தினருக்கு சொந்தமான சிங்கப்பூர் வங்கிக்கணக்குகளை முடக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசால் நீரவ் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 19-ம் தேதி நீரவ் மோடி, லண்டனில் ஸ்காட்லாந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நீரவ் மோடிக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இந்தியாவிலும் ஏராளமான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் வங்கிகளில் நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்துள்ள வங்கி கணக்குகள் அண்மையில் முடக்கப்பட்டன. இந்தநிலையில் சிங்கப்பூரில் நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி குடும்பத்தினரின் வங்கி கணக்குகளை முடக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீரவ் மோடியின் பணம், சிங்கப்பூரில் செயல்படும் பெவிலியன் பாயிண்ட் கார்பரேஷன் நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது,  நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி மற்றும் அவரது கணவர் மயனக் மேத்தா ஆகியோருக்கு சொந்தமானது.

இவர்களது வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் எனக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்திய அமலாக்கத்துறை மனுத்தாக்கல் கோரி இருந்தது. இதனை ஏற்று 44.41 கோடி ரூபாய் மதிப்புள்ள இருவரது வங்கி கணக்குகளையும் முடக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தகவலை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x