Last Updated : 03 Jul, 2019 10:34 AM

 

Published : 03 Jul 2019 10:34 AM
Last Updated : 03 Jul 2019 10:34 AM

மகாராஷ்டிராவில் அணை உடைந்து 8 பேர் பலி: 25க்கும் மேற்பட்டோர் மாயம்: 7 கிராமங்களில் வெள்ளம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்துவரும் மிக கனமழை காரணமாக,  திவாரே அணை நேற்று நள்ளிரவு உடைந்ததில் 6 பேர் பலியானார்கள்.  20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

12க்கும் மேற்பட்ட வீடுகள் அணை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 7 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. மும்பை நகரில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது. விமானம், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 400 மீ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை மையம் அறிவிக்கையின்படி, இன்னும் 4 நாட்களுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இந்த சூழலில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணையில் நேற்று இரவு திடீரென ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்ட அணையில் இருந்த நீர் வெளியேறத் தொடங்கியது.

இந்த திவாரே அணை என்பது மும்பையில் இருந்து ஏறக்குறைய 275 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அணைப்பகுதியில் இருக்கும் மக்களின் அளித்த தகவலின்படி, அணையின் ஒருபகுதி நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென உடைந்து தண்ணீர் ஆவேசமாக வெளியேறத் தொடங்கியது.

அணையில் இருந்த தண்ணீர் வெளியேறியதில் அணைக்கு அருகே குடியிருந்தவர்களின் 12 வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்ப்பட்டன. 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

இதையடுத்து அணை உடைந்த தகவல் தேசிய பேரிடர் மேம்பாட்டு மையத்துக்கு(என்டிஆர்எப்) அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்கள். நள்ளிரவில் இருந்து மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கையால், இதுவரை 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 7 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பினர், தொண்டு நிறுவனப் பணியாளர்கள், தீ தடுப்புத் துறையினர், போலீஸார் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து  அதிகாரி ஒருவர் கூறுகையில்," அணை 15 ஆண்டுகள் பழமையானது. இந்த அணையில் ஏற்கெனவே லேசான அளவில் விரிசல் இருந்ததாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிராமத்தினர் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். இந்த அணை உடைந்ததில் இதுவரை 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. தீவிரமாகத் தேடி வருகிறோம் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x