Last Updated : 29 Jun, 2019 11:57 AM

 

Published : 29 Jun 2019 11:57 AM
Last Updated : 29 Jun 2019 11:57 AM

கோதாவரி நீர் கிருஷ்ணா செல்கிறது: தண்ணீர் பங்கீட்டை சுமூகமாக தீர்த்த ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள்

5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நீர் பங்கிட்டு பிரச்சினையை ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் சுமூகமான முறையில் அமர்ந்து பேசித் தீர்த்துள்ளனர்.

கோதாவரி ஆற்று நீரை, கிருஷ்ணா நதிக்கு திருப்பி பற்றாக்குறையைப் போக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களுக்கும் இடையே நீர் பங்கீடு முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்தது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் அவருக்கும் இடையே சரியான உறவு இல்லாததால், நீர் பங்கீடு குறித்த பேச்சு இழுபறியில் சென்றது.

இந்நிலையில், நேற்று ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனில்  பேச்சு நடத்தினர். இரு மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, இரு மாநில உயர் அதிகாரிகள் மட்டத்திலும் முழுஅளவில் பேச்சு நடந்தது.

அப்போது இரு மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, பற்றாக்குறை மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது, விவசாயத்துக்கு போதுமானதண்ணீரை வழங்கு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் கோதாவரி நிதியில் இருந்து நீரை கிருஷ்ணா நதிக்கு திருப்ப இரு முதல்வர்களும் இடையே பேசி முடிக்கப்பட்டது.

இருமாநில நீர்பாசன அதிகாரிளும் இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கையை வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய இரு முதல்வர்களும் உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினமே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், சந்திரசேகர் ராவும் அமர்ந்து பேசி இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், " கிருஷ்ணா அணையில் தற்போது நீர் மிகக் குறைவாக இருக்கிறது. அந்த தண்ணீர் ஆந்திராவின் ராயலசீமா, தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இருக்காது.

ஆதலால், இருக்கின்ற நீரை சிறப்பான முறையில் பயன்படுத்தி, பகிர்ந்து, விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும், குடிநீருக்கும் இருமாநிலங்களில் பற்றாக்குறை வராமல் பார்க்க வேண்டும். கடந்த கால கசப்பான நினைவுகளை போனது போகட்டும் என்று ஒதுக்கிவைத்து, இருமாநில மக்களுக்கும் முடிந்த அளவு நீரை பகிர்ந்து கொள்ளவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், " ஆந்திர மாநிலத்தில் தேர்தலுக்கு பின், இரு மாநில அரசுகளின் நட்புறவில் தரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையே நீ  பெரியவனா நான் பெரியவனா எனும் போட்டி இல்லை. நீர் பங்கீட்டில் பிரச்சினை இல்லை, எந்தவிதமான வருத்தமும் இல்லை, எந்தவிதமான வேறுபாடும், மனவருத்தங்களும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் தேவை. நாங்கள் இருவரும் தண்ணீர் பிரச்சினை செய்துவந்தால், அடுத்த தலைமுறையினருக்கு தண்ணீர் வழங்க முடியாது.

நானும், ஜெகன்மோகன் ரெட்டியும் எங்களைப் பற்றி சிந்திக்கமாட்டோம். மக்களின் மனநிலையில் இருந்துதான் எந்த விஷயத்தையும் சிந்திப்போம். நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு நல்ல விஷயங்களை செய்வது கடமை.

கிருஷ்ணா, கோதாவரியில் 4 ஆயிரம் டிஎம்சி நீர் இருக்கிறது. இரு மாநிலங்களும் நீர் இருப்பை நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். ஆண்டுக்டு 3 ஆயிரம் டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை எவ்வாறு பயன்படுத்து வது என்று ஆலோசிப்போம் " எனத் தெரிவித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில்  " குறைந்த கட்டணத்தில் இரு மாநில மக்களுக்கும் நீர் வழங்க முடிவு செய்துள்ளோம். எளிமையான, சிறந்த முறையில், வேளாண் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். கிருஷ்ணா நதியில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. அடுத்தவரும் நாட்களில் மேலும் குறையும். ஆதலால், கோதாவரி நீரை திருப்பி பிரச்சினைக்கு தீர்வு காண முயல்கிறோம்.  நாங்கள் இருவரும் சுமூகமாகப் பேசித் தீர்த்துள்ள உதாரணமாகஎடுத்து பல்வேறு மாநிலங்கள் தங்கள் பிரச்சினை தீர்த்துக்கொள்ள வேண்டும்"  எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x