Last Updated : 23 Aug, 2017 08:55 AM

 

Published : 23 Aug 2017 08:55 AM
Last Updated : 23 Aug 2017 08:55 AM

முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப்படி செல்லாது: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

முஸ்லிம்களின் முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள், 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக், சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க கோரிஷாயரா பானு உள்ளிட்ட 5 பெண்கள் மற்றும் இதர இரண்டு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிமன்றம் 3-க்கு 2 என்ற அடிப்படையில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

6 மாதங்கள் தடை

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘முஸ்லிம்கள் பின்பற்றும் முத்தலாக் விவாகரத்து நடைமுறை அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத உரிமையின் கீழ் வருகிறது. எனவே, அந்த நடைமுறை சட்ட விரோதமானது அல்ல. இருந்தாலும் தலாக் முறைக்கு 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்குள் இந்த நடைமுறையை மாற்றியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். இந்த 6 மாதங்களுக்குள் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், புதிய சட்டத்தை நிராகரிக்கும் அல்லது நிறைவேற்றும் காலம் வரை இந்த தடை நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து புதிய சட்டத்தை இயற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில், ‘முத்தலாக் நடைமுறை மூலம் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமான முறையில், உடனடியாக, திரும்ப பெற முடியாத விவாகரத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். எனவே, இந்த நடைமுறை பெண்களுக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. முஸ்லிம்கள் புனித நூலாக கருதும் குரானில் முத்தலாக் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. எனவே, இந்த நடைமுறை மத அடிப்படை உரிமையின் கீழ் வராது. மத தத்துவத்தில் இடம்பெறாத ஒரு விஷயத்தை பழக்கவழக்கம் அல்லது சட்ட அங்கீகாரம் மூலம் பின்பற்ற முடியாது. முத்தலாக் நடைமுறைக்கு கடந்த 1937-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஷரியா சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. முஸ்லிம்களின் ஹனாபி வழக்கத்தின் கீழ் பின்பற்றப்படும் இந்த நடைமுறை குரானில் கூறப்பட்டுள்ள தத்துவத்துக்கு எதிரானது. 1400 ஆண்டுகள் பின்பற்றப்படும் நடைமுறை என்ற வாதம் சட்ட அங்கீகாரத்தை பெற்றுத் தராது. பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்கும்போது, நீதிமன்றம் கைகளை கட்டிக் கொண்டு இருக்க முடியாது. எனவே, முத்தலாக் நடைமுறை சட்டப்படி செல்லாது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 பேர் ஒரு விதமாகவும், 2 பேர் வேறு விதமாகவும் தீர்ப்பளித்துள்ளதால், பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித் ஆகியோர் அளித்த தீர்ப்பு 395 பக்கங்கள் அடங்கிய இறுதி தீர்ப்பாக அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முத்தலாக் நடைமுறை சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

தவறாக செய்தி வெளியிட்ட மீடியா

உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை தீர்ப்பு வெளியானதும் பரபரப்பில் இருந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் முதலில் படிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் தீர்ப்பின் அடிப்படையில், ‘முத்தலாக் நடைமுறை சட்டப்படி செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு’ என்று செய்தி வெளியிட்டுவிட்டனர். மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு முதலில் படிக்கப்பட்டதே அதற்கு காரணம். பின்னர், பெரும்பான்மை நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு இரண்டாவதாக வெளியான பின்பே தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் தவறை உணர்ந்து செய்தியை மாற்றி வெளியிட்டன.

மேல்முறையீடு செய்ய முடியுமா?

முத்தலாக் வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பதால், இந்த தீர்ப்பே புதிய சட்டத்துக்குச் சமம். இதற்கு மேல் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதன்மீது மேல்முறையீடு செய்ய முடியாது. ஆனால், வேறு ஏதாவது காரணங்களை தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீராய்வு மனுவை ஏற்பதும் நிராகரிப்பதும் உச்சநீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது.

விதை போட்ட ஷா பனோ வழக்கு:

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு முதலில் விதைபோட்ட வழக்கு ஷா பனோ வழக்கு தான். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ஷா பனோ. இவரது கணவர் முகமது அகமது கான் திடீரென ஷா பனோவை விவாகரத்து செய்துவிட்டார். 5 குழந்தைகளுடன் சிரமத்துக்கு ஆளான ஷா பனோ தனது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1985-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. அப்போது காங்கிரஸ் அரசு விவாகரத்து மற்றும் பாதுகாப்பு சட்டத்தை 86-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதில் பெண்கள் விவாகரத்து பெற்ற பின் 3 மாதங்களுக்கு கணவரிடம் இருந்து உதவித்தொகை பெற உரிமையுண்டு என்ற பிரிவு இடம்பெற்றது. முஸ்லிம் பெண்களின் உரிமை கோரிய போராட்டத்துக்கு முதல் விதை தூவியதால் ஷா பனோ வழக்கு இன்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்காக கருதப்படுகிறது. 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x