Last Updated : 01 Aug, 2017 08:14 AM

 

Published : 01 Aug 2017 08:14 AM
Last Updated : 01 Aug 2017 08:14 AM

ரூபா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக முதல்வருக்கு அதிமுக கடிதம்: எல்லாவற்றையும் சந்திக்க தயார் என ரூபா பேட்டி

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளா் சசிகலா குறித்து ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுக்கும் முன்னாள் டிஐஜி ரூபா மீது நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி முதல்வா் சித்தராமையாவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டார். சிறையில் சீருடை அணியாமல், சிறப்பு சமையலறை, வரவேற்பறை, எல்இடி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை அனுபவித்து வருகிறார் என டிஐஜி ரூபா டி.மவுட்கில் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிஜிபி சத்திய‌நாராயண ராவ், ரூபா உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக (அம்மா) கட்சியின் செய்தித் தொடர்பாளரும், கர்நாடக செயலாளருமான புகழேந்தி தனது வழக்கறிஞர் கிருஷ்ணப்பன் மூலமாக முதல்வர் சித்தராமையாச, உயர்நிலை விசாரணைக் குழு அதிகாரி வினய்குமார் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

புகழேந்தி கடிதம்

அதில், ‘‘சிறை முறைகேடு தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூபா சிறைத் துறை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் ரூபா, காவல் துறை விதிமுறைகளுக்கு எதிராக ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

தனது சுய விளம்பரத்திற்காக ரூபா சசிகலாவின் புகழுக்கு களங்கம் விளைவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு விசாரணையை தொடங்கிய பிறகும் ரூபா, அமைதி காக்காமல் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார். காவல் துறையின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் ரூபா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சசிகலாவுக்கு எதிராக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்த‌ வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

சுயவிளம்பரம் தேவை இல்லை

இது தொடர்பாக முன்னாள் டிஐஜி ரூபா கூறுகையில், ''சசிகலாவுக்கு எதிராக நான் தெரிவித்த புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஊடகங்களில் ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன. டிஜிபி சத்தியநாராயண ராவ் என் மீது ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். இப்போது அதிமுகவினரும் (அம்மா) புகார் அனுப்பி இருக்கிறார்கள். எனது கடமையை செய்ததற்காக என் மீது தொடுக்கப்படும் பிரச்சினை களை சந்திக்க தயாராக இருக்கிறேன். இதில் இந்த சுயவிளம்பரமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x