Published : 15 Aug 2017 01:14 PM
Last Updated : 15 Aug 2017 01:14 PM

யோகி ஆதித்யநாத் பதவி விலகுவாரா?- பதில் சொல்ல மறுத்த அமித் ஷா

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகுவாரா என்ற கேள்விக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இறந்தன.

இந்தச் சம்பவத்துக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் செய்தியாளர்கள், "60 குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகுவாரா?" என கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்க அமித் ஷா மறுத்துவிட்டார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பாஜகவை அம்மாநிலத்தில் வலுப்படுத்தும் வகையில் அமித் ஷா அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், "கோரக்பூர் சம்பவம் முதலாவது அல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் வேலை, அடுத்தவர்களிடம் ராஜினாமா கோருவது மட்டுமே. முதற்கட்ட விசாரணை இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. உத்தரப் பிரதேச முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை வெளியிடுவோம். கோரக்பூர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆனால், "60 குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகுவாரா?" என கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்க அமித் ஷா மறுத்துவிட்டார்.

குழந்தைகள் பலியான சோகம் தீராத நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜன்மாஷ்டமியை விமரிசையாகக் கொண்டாட உ.பி., மக்களுக்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு, "ஜன்மாஷ்டமி அரசு விழா ஒன்றுமில்லையே" என அமித் ஷா பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x