Published : 09 Aug 2017 07:12 PM
Last Updated : 09 Aug 2017 07:12 PM

ஐஏஎஸ் அதிகாரி மகளை காரில் துரத்திய விவகாரம்: ஹரியாணா பாஜக தலைவர் மகன், நண்பர் கைது

ஹரியாணா மாநிலம் சண்டிகரில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகளை மாநில பாஜக தலைவர் சுபாஷ் பர்லாவின் மகன் விகாஸ் என்பவரும் அவரது நண்பரும் காரில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்து மிரட்டியுள்ள விவகாரத்தில் பாஜக தலைவர் மகன் விகாஸ் பர்லா, இவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைது குறித்து சண்டிகர் டிஜிபி தஜேந்தர் சிங் லுத்ரா செய்தியாளர்களிடம் கூறிய போது, “சட்டப்பிரிவு 365 மற்றும் 511 ஆகியவற்றை இருவருக்கு எதிராகவும் எழுப்பவுள்ளோம். இருவரையும் வியாழனன்று கோர்ட்டிற்குக் கொண்டு சென்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோருவோம்” என்றார்.

மேலும், “இருவரையும் துருவித்துருவி விசாரித்தோம், இதில் முக்கியத் தகவல் கிடைத்தது. இது விசாரணையில் எங்களுக்கு உதவும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்தக் காட்சியை மீண்டும் நமக்கு நடித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது, அப்போதுதான் உண்மைகளை சரிபார்க்க முடியும்.

எங்களுக்கு எந்த ஒரு அரசியல் நெருக்கடியும் கிடையாது, நாங்கள் தனித்துவமாக தொழில்ரீதியாகச் செயல்படுகிறோம்” என்றார் டிஜிபி லுத்ரா.

கடத்தல் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த லுத்ரா, பல உண்மைகள் அடிப்படையில் புதிய சட்டப்பிரிவுகளை வலியுறுத்தலாம், இதற்கு சாட்சியின் நேரடி வாக்குமூலம் மற்றும் பிற சாட்சியங்கள் தேவை, இதைத்தவிர சட்ட ஆலோசனையும் தேவைப்படுகிறது.

காவல்நிலையத்துக்கு விகாஸ் மற்றும் நண்பர் ஆஷிஷ் காலை 11 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் இருவரும் தங்கள் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி காரில் மதியம் 2.30 மணிக்குத்தான் காவல்நிலையம் வந்தனர்.

விகாஸ், ஆஷிஷ் இருவரும் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர், இதனையடுத்து போலீஸார் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இருவரையும் சண்டிகர் போலீஸ் கைது செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x