Last Updated : 16 Aug, 2017 04:25 PM

 

Published : 16 Aug 2017 04:25 PM
Last Updated : 16 Aug 2017 04:25 PM

லடாக்கில் ஊடுருவ சீனா முயற்சி; இந்தியா முறியடிப்பு

சீன ராணுவ வீரர்கள் காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பாங்காங் ஏரி வழியாக மீண்டும் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த லடாக் டிவிஷன் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அருணாசல பிரதேச மாநிலத்தின் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் காஷ்மீரின் லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்த எல்லைப் பகுதிகளில் சீன அரசு சாலை, ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. இதற்குப் பதிலடியாக மத்திய அரசும் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களின் ஊடுருவல் முயற்சியை இந்தியத் தரப்பினர் வெற்றிகரமான முறியடித்தனர்.

ஃபிங்கர் ஃபோர் மற்றும் ஃபிங்கர் ஃபைவ் (Finger Four and Finger Five) என்னும் இந்தியப் பகுதிகளில் நுழைய சீன வீரர்கள் நுழைய முயன்றனர். ஊடுருவல் முயற்சி காலை 6 மணி மற்றும் 9 மணிக்கு என இருமுறை நடந்தது. ஆனால் இந்திய தரப்பு எச்சரிக்கையாக இருந்ததால் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இரண்டு தரப்பிலும் வீரர்கள் தங்களது எல்லைக்குத் திரும்பியதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2013 ஏப்ரலில் காஷ்மீரின் லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கினர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் எழுந்தது. இந்த பதற்றம் சுமார் 3 வாரங்களுக்கு நீடித்தது. அப்போது மத்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாக சீன ராணுவ வீரர்கள் தங்கள் எல்லைக்குத் திரும்பினர்.

சீன ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி, தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x