Published : 10 Aug 2017 10:07 AM
Last Updated : 10 Aug 2017 10:07 AM

பேச்சு சுதந்திரத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து: ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பவள விழா- பாஜகவை மறைமுகமாக சாடிய சோனியா காந்தி

பேச்சு சுதந்திரத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜகவை மறைமுகமாக குற்றம் சாட்டி உள்ளார்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியதன் பவள விழா (75) ஆண்டை முன்னிட்டு, மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது சோனியா காந்தி பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் (காங்கிரஸார்) பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பலர் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். காங்கிரஸ் தொண்டர்கள் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்கவே இல்லை.

ஆனால், சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் (பாஜகவினரால் மதிக்கப்படும் வி.டி.சவார்க்கர்) எதிர்ப்பு தெரிவித்தனர். இதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த அமைப்பினர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவே இல்லை.

பேச்சு சுதந்திரத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகத்தை சீரழிக்க சில இருண்ட சக்திகள் முயற்சி செய்கின்றன. நாம் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், இதுபோல அச்சுறுத்தலாக உள்ள சக்திகளை தோற்கடிக்க வேண்டும். மதவாத சக்திகள் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம். குறுகிய மனப்பான்மையும் மதவாத சிந்தனையும் கொண்டவர்களிடம் நம் நாடு சிக்கிக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்கக் கூடிய இந்தியாவை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x