Published : 16 Aug 2017 12:00 PM
Last Updated : 16 Aug 2017 12:00 PM

கோரக்பூர் சம்பவத்துக்கு சுகாதாரமின்மையே காரணம்: யோகி ஆதித்யநாத் புதிய விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து நேரடியாக பதிலளிக்காத முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற சம்பவங்களுக்கு சுகாதாரமின்மையே காரணம் எனக் கூறியுள்ளார்.

கோரக்பூரில் நடந்தது போன்ற சம்பவங்களுக்கு சுகாதாரமின்மையே காரணம். எனவே உ.பி., மக்கள் தூய்மை இந்தியா திட்டத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக்கிக் கொள்ள வேண்டும்.

சுதந்திர தின உரையில் அவர் கூறியதாவது:

ஒவ்வொரு சம்பவமும் விபத்தும் நமக்கு சில படிப்பினைகளைத் தருகின்றன. அந்தப் பாடம்தான் மீண்டும் ஒருமுறை அச்சம்பவம் நிகழாமல் நாம் உறுதிபடத் தடுக்க வழிசெய்கிறது. கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மூளைக் காய்ச்சல், சிக்குன் குன்யா, காலா அசார், டெங்கு போன்ற நோய்கள் பரவ சுகாதாரமின்மையே காரணம். இத்தகைய கொடிய நோய்களுக்குத் தீர்வு தூய்மை இந்தியா திட்டத்தை கடைபிடிப்பதே. தூய்மை இந்தியா திட்டம் சுகாதார இந்தியா திட்டமும் கூட. கடந்த இருபது ஆண்டுகளில் மூளைக் காய்ச்சல் நோய்க்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். எனவே, உ.பி. மாநில மக்கள் தூய்மை இந்தியா திட்டத்தை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

விநியோகத்தை நிறுத்தவில்லை:

இதற்கிடையில், கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனைக்கு பிராண வாயு சிலிண்டர் விநியோகித்துவந்த புஷ்பா சேல்ஸ் தனியார் நிறுவனம் கடந்த 6 மாத காலமாக நிலுவைத் தொகையைப் பொருட்படுத்தாமல் சிலிண்டரை விநியோகித்து வந்ததாகக் கூறியுள்ளது.

 இது குறித்து அந்நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை மேலாளர் கூறும்போது, "நாங்கள் கடந்த 6 மாத காலமாக நிலுவைத் தொகையைப் பொருட்படுத்தாமல் சிலிண்டரை விநியோகித்து வந்தோம். கடைசியாக கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதிதான் நாங்கள் சிலிண்டரை விநியோகிக்க வேண்டியிருந்தது" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x