Last Updated : 20 Aug, 2017 12:38 PM

 

Published : 20 Aug 2017 12:38 PM
Last Updated : 20 Aug 2017 12:38 PM

பெங்களூரு அரசு மனநலக் காப்பகத்தில் ஆதார் மூலம் தமிழக இளைஞர் கண்டுபிடிப்பு: 4 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர் ஒருவர் அவரது ஆதார் எண் மூலமாக பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சாண்டி ஜெயராமன் (46) என்பவரின் இளைய மகன் கார்த்திக் (20). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதனால் கவலையடைந்த பிச்சாண்டி ஜெயராமன் தனது மகனை வேலூர், சென்னை, சேலம், சித்தூர் என பல இடங்களில் தேடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் அரசு மனநலம் குன்றியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு ஆதார் எண் பதிவுக்கான பணி நடந்தது. அப்போது இளைஞர் ஒருவரை பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவற்றை பதிவு செய்த போது, அவர் ஏற்கெனவே ஆதார் அட்டைக்காக வேலூரில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பான தகவல்களை ஆராய்ந்த போது அந்த இளைஞரின் பெயர் கார்த்திக் என்றும் வேலூரை சேர்ந்த பிச்சாண்டி ஜெயராமனின் மகன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்துக்கு தகவல் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து பிச்சாண்டி ஜெயராமன் குடும்பத்தினர் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தனர். அவர்களிடம் கார்த்திக்கை கர்நாடக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக பிச்சாண்டி ஜெயராமன் கூறும்போது, “எனக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி எனது மகன் ரயிலேறி பெங்களூரு வந்துள்ளார். அங்கு தவித்த அவரை மீட்ட அதிகாரிகள் மனநலம் குன்றியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். தற்போது ஆதார் எண்ணுக்கு பதிவு செய்யும்போது, அனைத்து விவரமும் தெரியவந்தது. அதிகாரிகள் எனது மகனை ஒப்படைத்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகன் எங்களுடன் சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதுபோல் கர்நாடக மாநிலத்தில் அரசு மனநலம் குன்றியோர் காப்பகத்தில் இருந்து ஆதார் எண் மூலமாக 10 பேர் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x