Last Updated : 09 Aug, 2017 09:02 AM

 

Published : 09 Aug 2017 09:02 AM
Last Updated : 09 Aug 2017 09:02 AM

உத்தராகண்டில் ஆட்சி மாற்றம் காரணமாக மானிய விலை இந்திரா உணவகங்களுக்கு சிக்கல்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மானிய விலை இந்திரா உணவகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மானிய உதவியை ஆளும் பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளதே இதற்கு காரணம் ஆகும்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்கள் மானிய விலை உணவகங்களை தொடங்கின. உத்தராகண்ட் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2015, நவம்பர் 19-ல் மானிய விலை உணவகங்களை தொடங்கியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98-வது பிறந்த நாளையொட்டி ‘இந்திரா அம்மா உணவகம்’ என்ற பெயரில் இந்த உணவகங்கள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டன. மாநில அரசின் மானிய உதவியுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இவற்றை நிர்வகித்து வந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதிவரை இந்த உணவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு உத்தராகண்டில் சட்டப்பேரவை தேர்தல் பணி தொடங்கியதில் இருந்து இந்திரா உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் நிறுத்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகும் இந்த நிலை தொடர்கிறது.

இதுகுறித்து ராஜ் லஷ்மி சுயஉதவிக் குழுவின் தலைவி பூஜா துவேதி, ‘தி இந்து’விடம் தொலைபேசியில் கூறும்போது, “மாநிலத் தலைநகரான டேராடூனில் மட்டும் 10 உணவகங்களுக்கு கடந்த 8 மாதங்களாக ரூ.33 லட்சம் வரை அரசு மானியம் நிலுவையில் உள்ளது. நாங்கள் நடத்தும் ஒரு உணவகத்துக்கு பல லட்சம் வரவேண்டியுள்ளது. எனினும் கடன் பெற்று சமாளித்து வருகிறோம். இதேநிலை நீடித்தால் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இதை நடத்த முடியும் எனக் கூறமுடியாது” என்றார்.

உத்தராகண்டின் 13 மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் செயல்பட்டு வரும் இந்திரா உணவகங்களால் தினமும் சுமார் 2 லட்சம் பேர் பலன் அடைகின்றனர். இவற்றில், சாதம், ரொட்டி, காய்கறி, பருப்பு மற்றும் இனிப்பு கொண்ட மதிய உணவு ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மானிய உதவி நிறுத்தப்பட்டுள்ளதால் இவை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் மாநில ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் மனிஷ் பவார் கூறும்போது, “இந்த உணவகங்கள் நடத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அதற்கு ஏற்பாடு செய்த பின் ஒதுக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக, ‘தி இந்து’விடம் உத்தராகண்ட் அமைச்சக வட்டாரம் கூறும்போது, “இந்த உணவகங்களின் பெயரை மாற்றி, சில மாற்றங்களுடன் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைப்பதா அல்லது படிப்படியாக மூடுவதா என்ற யோசனையில் அரசு உள்ளது. இது தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x