Published : 21 Aug 2017 09:25 AM
Last Updated : 21 Aug 2017 09:25 AM

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 100-க்கு 100 பெற்ற மாணவர்: லிம்கா புத்தகத்தில் இடம்பெற்று சாதனை

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் உதய்ப்பூர் மாணவர் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

நாடு முழுவதும் ஐஐடி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த கல்பித் வீர்வால் என்ற மாணவர் ஜேஇஇ-மெயின் நுழைவுத் தேர்வில் மொத்தம் உள்ள 360 மதிப்பெண்கள் பெற்று 100-க்கு 100 என்ற அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது இவர் பாம்பே ஐஐடி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

இவருடைய சாதனை, ‘2018-ம் ஆண்டு கல்வியில் சாதனை’ என்ற பிரிவின் கீழ் லிம்கா புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மும்பையில் இருந்து பிடிஐ.க்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் கல்பித் வீர்வால் கூறும்போது, ‘‘ஜேஇஇ நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், 100-க்கு 100 எடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல் லிம்கா சாதனை புத்தகத்திலும் என் பெயர் இடம்பெறும் என்பதை எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.

கல்பித் வீர்வால் மேலும் கூறுகையில், ‘‘நுழைவுத் தேர்வுக்காக தினமும் 15 மணி நேரமெல்லாம் நான் படிக்கவில்லை. ஆனால் கட்டுப்பாடுடன் படித்ததால் வெற்றி பெற்றேன்’’ என்றார். லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள கல்பித் வீர்பால், ஜேஇஇ - அட்வான்ஸ்டு தேர்வில் 109-வது ரேங்க் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x