Last Updated : 31 Aug, 2017 04:07 PM

 

Published : 31 Aug 2017 04:07 PM
Last Updated : 31 Aug 2017 04:07 PM

கர்நாடகாவில் தள்ளுபடி விலையில் விற்பனை ஆகும் மருத்துவ இடங்கள்

கர்நாடகாவில் இந்த ஆண்டின் ஆகப்பெரிய தள்ளுபடி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல்லை, நீங்கள் நினைப்பது போல அமேசான் அல்லது ஃப்ளிப்கார்ட் விற்பனை குறித்துச் சொல்லவில்லை. கர்நாடக தனியார் கல்லூரிகளில் என்ஆர்ஐ மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளில் தற்போது மேற்கொள்ளப்படும் தள்ளுபடியைக் குறித்தே சொல்கிறேன்.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி இந்த வியாழக்கிழமையோடு மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகளை முடிக்க வேண்டும். இதனால் கர்நாடக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்படும் என்ஆர்ஐ மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கான இடங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

மருத்துவப் படிப்பில் இந்த ஒதுக்கீட்டுக்கு வருடாவருடம் சுமார் ரூ.22 லட்சத்தில் இருந்து ரூ.41.98 லட்சம் வரை ஆகும் கட்டணத்தில் தற்போது 40% தள்ளுபடி அளிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் இந்த இடங்கள் அனைத்தும், ஒட்டுமொத்த படிப்புக்கும் (4.5 ஆண்டுகள்) சேர்த்து அதிகபட்சமாக ரூ.1.3 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டின் (2017-18) ஆரம்பத்தில் முழுப் படிப்புக்கான விலை அதிகபட்சமாக ரூ.1.88 கோடியாக இருந்தது.

பொது கலந்தாய்வு

ஆனால் தற்போது என்ஆர்ஐ மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கான 773 இடங்களில் 100 இடங்கள் கூட முழுமையடையாத நிலையில் 676 இடங்கள் காலியாகவே உள்ளன.

மருத்துவப் படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்தும், அவற்றுக்கான சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை. இதற்கான முக்கியக் காரணமாக ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைக் கூறலாம்.

அத்துடன் நீட் என்னும் அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் முதல் என்ஆர்ஐ மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இது என்பதும் இதன் மிக முக்கியக் காரணம். 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காலியாக உள்ள என்ஆர்ஐ மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகள் அனைத்தும் நிரப்பப்படாத இடங்கள் என்ற பட்டியலில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமே அளிக்கப்பட வேண்டும்.  

அவசரப்படுத்தும் கல்லூரிகள்

இதுகுறித்துப் பேசிய கர்நாடகா புரொஃபஷனல் கல்லூரிகள் ஃபவுண்டேஷனின் தலைவர் ஜெயராம், ''வியாழக்கிழமைக்குள் இந்த மருத்துவ இடங்களை நிரப்ப தனியார் கல்லூரிகள் அவசரத்தில் இருக்கின்றன.

ஆனாலும் ஏராளமான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. தள்ளுபடி விற்பனை அளித்தபோதும், அனைத்து இட சேர்க்கையையும் பூர்த்தி செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்'' என்றார்.

பெற்றோர் வேதனை

ஆனால் இதுகுறித்து அறிந்த பெற்றோர்களும், மருத்துவம் படிக்க நினைத்த மாணவர்களும் வேதனையில் இருக்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கு முன்னதாகவே இவ்வளவு கட்டணம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாகப் பலர் குமுறுகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இயலாத மாணவியின் பெற்றோர் பேசும்போது, ''முன்னதாக மருத்துவப் படிப்புக்காக கல்லூரிகளை நாங்கள் அணுகியபோது, மற்ற நிர்வாக ஒதுக்கீடுகளில் படிக்க ஆண்டுக்கு ரூ.42 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறினர். அவ்வளவு பணத்தைக் கட்ட வசதியில்லாமல், எங்கள் மகளை பொறியியல் கல்லூரியில் சேர்த்தோம். ஆனால் இப்போது அதே மருத்துவ இடம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் என்ற தொகையில் கிடைக்கிறது.

தள்ளுபடி விலையில் மருத்துவ இடம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், இந்த முறைக்காக நிச்சயம் நாங்கள் காத்திருந்திருப்போம்'' என்றார்.

விரைவில் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள், தள்ளுபடி முறையில் மருத்துவ இடங்கள் விற்பனை குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x