Last Updated : 12 Aug, 2017 10:20 AM

 

Published : 12 Aug 2017 10:20 AM
Last Updated : 12 Aug 2017 10:20 AM

டெல்லியில் தமிழக முதல்வருடன் விவசாயிகள் சந்திப்பு

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த தமிழக முதல்வர் பழனிசாமியை இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் நேற்று சந்தித்துப் பேசினர்.

தென்னக நதிகள் இணைப்பு, வேளாண் கடன் தள்ளுபடி, வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை, எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகள் அமலாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் இரண்டாம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று டெல்லி வந்திருந்தார். அவரை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அய்யாகண்ணு கூறும்போது, “கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாங்கள் 41 நாட்கள் நடத்திய போராட்டம் தமிழக முதல்வரின் வேண்டுகோள் காரணமாக கைவிடப்பட்டது. இதை நினைவுகூர்ந்த முதல்வர் எங்கள் பிரச்சினைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுவதாக உறுதி அளித்தார்.

அரியலூர் மாவட்டம் மருதை ஆற்றில் அணைகட்டி, அதன் மூலம் பறவைகள் சரணாலாயத்திற்கு தண்ணீர் விடும் திட்டமும் விருதுநகர் மாவட்டத்தில் குண்டாறு திட்டமும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். எங்களை பிரதமர் சந்திக்க வலியுறுத்தி இதுவரை சுமார் 50 எம்.பி.க்கள் கையெப்பம் இட்டுள்ளனர்” என்றார்.

கடந்த 9-ம் தேதி காலவரம்பற்ற உண்ணாவிரதத்தை அய்யாகண்ணு உள்ளிட்ட 6 விவசாயிகள் தொடங்கினர். இதில் பல்லடத்தை சேர்ந்த நாரயணசாமி நாயுடு (84) என்ற விவசாயி மட்டும் அதை தொடர்கிறார்.

முதல்வரை சந்தித்த பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரையும் விவசாயிகள் சந்தித்தனர். அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவளிக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

விவசாயிகளின் தீர்மானங்கள்

இதற்கிடையே, தேசிய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில விவசாயிகள் நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க உள்ளனர்.

மத்தியபிரதேத்தில் நர்மதா அணைக்கு எதிராகப் போராடி வரும் மேதா பட்கர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்துப் பேச வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x