Published : 23 Aug 2017 11:04 AM
Last Updated : 23 Aug 2017 11:04 AM

முஸ்லிம் பெண்கள் இனி தலைநிமிர்ந்து நிற்கலாம்: ஷாயிரா பனோ கருத்து

முஸ்லிம் பெண்கள் இனி தலைநிமிர்ந்து நிற்கலாம் என்று முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஷாயிரா பனோ தெரிவித்துள்ளார்.

முத்தலாக் முறை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஷாயிரா பனோ நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த நாள் முஸ்லிம் பெண்களுக்கு வரலாற்றில் முக்கியமான நாள். சீர்திருத்த நடவடிக்கையில் இது முக்கியமான மைல்கல்.

2015-ல் உத்தராகண்ட் மாநிலம் கஷிப்பூரில் வசித்து வந்தேன். திடீரென ஒருநாள் ஸ்பீடு போஸ்ட் மூலம் எனது கணவரிடம் இருந்து முத்தலாக் அறிவிப்பு வந்தது. எனது 2 குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆரம்பத்தில் பயந்தேன். பிறகுதான் சட்ட ரீதியாக போராட முடிவு செய்தேன். பலர் எனக்கு ஊக்கம்அளித்தனர். எனது சகோதரர் அர்ஷத் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர்தான் என்னை டெல்லிக்கு கூட்டிச் சென்றார். பின்னர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதி கிடைக்கும் என்று நம்பினேன்.

இது ஒரு மிகப்பெரிய தருணம். முஸ்லிம் பெண்கள் இனி தலைநிமிர்ந்து நிற்கலாம். இருந்தாலும், சீர்திருத்த நடவடிக்கைகளில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. பல தார திருமணம் போன்றவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இவற்றை எதிர்த்து மறுபடியும் நீதிமன்றம் செல்வேன்.

இவ்வாறு ஷாயிரா பனோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x