Last Updated : 21 Aug, 2017 06:22 PM

 

Published : 21 Aug 2017 06:22 PM
Last Updated : 21 Aug 2017 06:22 PM

டெல்லி சட்டப்பேரவையில் குரங்குகள் தொல்லை: மாநகராட்சி உதவியை நாட கேஜ்ரிவால் அரசு முடிவு

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாகி வருகிறது. இதை சமாளிக்க அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு புதுடெல்லி முனிசிபல் மாநகராட்சியின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவையில் கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை நிரந்தரமாக்குவது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு உள்ளே நுழைந்த சில குரங்குகள் தானும் அமைதியாக அமர்ந்து விவாதத்தை ரசித்துக் கொண்டிருந்தன. இதன் வாயில்களில் அதன் காவலர்கள் பாதுகாப்பு இருந்தும் அவர்கள் கால்களுக்கு இடையில் புகுந்து குரங்குகள் உள்ளே நுழைந்துள்ளன. அவை நடவடிக்கை திசைதிரும்பும் என்பதால் காவலர்களும் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளனர். ஏனெனில், இந்த குரங்குகளைப் பலவந்தமாக வெளியேற்றினால் அவை அங்குள்ள எல்எல்ஏக்களையும் கடித்து விடும் வாய்ப்புகள் அதிகம். பிறகு அன்றைய அவை நடவடிக்கை முடிந்த பிறகே அந்த குரங்குகள் வெளியேறி உள்ளன.

இதற்கு முன்னதாக ஜூலை 17-ல் குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் சில குரங்குகள் பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு போலீஸார் அமர்ந்திருந்த கூடாரத்தில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இவற்றுடன், டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் பாம்புகளும் அதிகம் உலவத் துவங்கி உள்ளன. இவையும் அதன் அலுவலர்களை கொத்தி விடும் வாய்ப்புகள் அதிகம் என அஞ்சப்படுகின்றன. இந்தநிலையில், டெல்லி சட்டப்பேரவையின் 70 உறுப்பினர்கள் புகாரின் பேரில் அதன் சபாநாயகரான ராம் நிவாஸ் கோயல் வடக்கு டெல்லி முனிசிபல் மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதில் அவர், 'ஒவ்வொரு நாளும் குரங்குகள் சட்டப்பேரவை அலுவலர் மற்றும் எம்எல்ஏக்களை கடித்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே, குரங்கு பிடிப்பவர்களை உடனடியாக அனுப்பி அனைத்தையும் வளாகத்தில் இருந்து வெளியேற்றவும். அப்போது தான் இங்கிருப்பவர்கள் குரங்குகள் பயம் இன்றி பணியாற்ற முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே டெல்லியில் குரங்குகள் அதிகம். இதனால், உயிரிழப்பு சம்பவங்களும் டெல்லியில் நடைபெற்றது உண்டு. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் டெல்லி வருகையின் போது கூட குரங்குகள் தொல்லை தந்து விடாமல் இருக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x