Last Updated : 23 Jul, 2017 01:53 PM

 

Published : 23 Jul 2017 01:53 PM
Last Updated : 23 Jul 2017 01:53 PM

‘மேட் இன் ஜெர்மனி’ முத்திரையிட்டு மோசடி: நவீன ‘தனுஷ்’ பீரங்கிகள் தயாரிக்க மலிவான சீன உதிரி பாகங்கள் சப்ளை - சிபிஐ வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போபர்ஸ் ரக பீரங்கிகளுக்கு, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாக ஏமாற்றி சீன உதிரி பாகங்கள் சப்ளை செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போபர்ஸ் பீரங்கிகள் வாங்கி யதில் மிகப்பெரும் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பீரங்கிகள் கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டன. அதன்பின், அதே தொழில்நுட்பத்தில் உள்நாட்டி லேயே பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்துக்கு வழங்கப்பட்டன. ‘ஹோவிட்சர்’ ரகத்தைச் சேர்ந்த அந்த நவீன பீரங்கிகளுக்கு ‘தனுஷ்’ என்று பெயரிடப்பட்டது. இதை ‘உள்நாட்டு போபர்ஸ் பீரங்கி’ என்று அழைக்கின்றனர்.

இந்த பீரங்கிகளை மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள, ‘துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலை’ (ஜிசிஎப்) தயாரித்து வழங்கியது. பீரங்கிகளுக்குத் தேவையான உதிரி பாகங்களை டெல்லியைச் சேர்ந்த சித் சேல்ஸ் சிண்டிகேட் என்ற நிறுவனம் சப்ளை செய்தது. இந்நிலையில், தனுஷ் பீரங்கிகள் தயாரிக்க தேவையான உதிரி பாகங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாக கூறி, சீனாவின் உதிரி பாகங்களை சப்ளை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த ‘சித் சேல்ஸ் சிண்டிகேட்’ நிறுவனம் மற்றும் ஜபல்பூர் துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலையின் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. போலி மற்றும் மலிவான உதிரி பாகங்களை சப்ளை செய்ததாக குற்றச் சதி, மோசடி, ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

ஜிசிஎப் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு சித் சேல்ஸ் சிண்டிகேட் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. தனுஷ் பீரங்கிகள் தயாரிக்க தேவையான உதிரி பாகங்களை சீனாவிடம் இருந்து வாங்கி, ஜெர்மனி பெயரில் சித் நிறுவனம் சப்ளை செய்துள்ளது. மேலும், அந்த உதிரி பாகங்களில் ‘மேட் இன் ஜெர்மனி’ என்ற முத்திரையும் இடப்பட்டுள்ளது. ஆனால், அதுபோன்ற உதிரி பாகங்களை ஜெர்மனி நிறுவனம் தயாரிப்பதில்லை என்ற தகவல் கிடைத்தது. ஆனால், ஜெர்மனியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக சித் நிறுவனம் போலி கடிதம் கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கடிதம் மற்றும் போலி உதிரி பாகங்களை துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலையில் உள்ள அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x